தஞ்சாவூர்: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 பிறந்தநாள் விழா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ரூபிகா மஹாலில் நடந்தது.


தஞ்சையை ஆட்சி செய்த அரசர்


இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர், முத்தரைய அரச குலத்தைச் சேர்ந்த தஞ்சாவூரை கி.பி. 705 முதல் 745 வரை ஆட்சி செய்த அரசர் ஆவார். இவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அறியப்படுகிறார். இவர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்பை ஆண்ட மன்னராவார். நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் இவர் கலந்து கொண்டார்.


12 போர்களில் போரிட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்


இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் மே 23 கி.பி.675 பிறந்தார். இவரது தந்தை மாறன் பரமேசுவரன் என்ற இளங்கோவதிராயர். 705 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பின் அரியணை ஏறினார். நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்து பாண்டிய, சேர படைகளை எதிர்த்து 12 போர்களில் போரிட்டுள்ளார். நாலடியார் நூலில், இவரது மரபு வழி குறிப்பிடப்படுகிறது. இவர் தமிழ் புலவர்கள் பலரை ஆதரித்து தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.


தஞ்சையில் பிறந்த நாள் விழா 


இவரைப் புகழ்ந்து பாச்சில் வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இவரது பிறந்தநாள் விழாவை சுவரன் மாறன் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தின. நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  


நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மற்றும் முத்தரையர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.எம்.மூர்த்தி தலைமை வகித்தார். முத்தரையர் கூட்டமைப்பு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வரவேற்றார்.


சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு


இதில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் எம்எல்ஏவும், திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ராஜேந்திரன், தேமுதிக மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 


தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தஞ்சை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் மா.சேகர், முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சி.வி. சேகர், அதிமுக மாநகர செயலாளர் சரவணன், பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாநில தலைவர் பாண்டித்துரை, தஞ்சை மத்திய மாவட்ட பாமக செயலாளர் சரவணன், நாம் தமிழர் கட்சி நெல்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.