தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் உரக்கச்சொல் என்ற புதிய செல்போன் செயலி அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதனை டி ஐ ஜி ஜியாவுல் ஹக் , எஸ் பி ஆசிஷ் ராவத் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.


உரக்கச் சொல் புதிய செயலி அறிமுகம்


குற்றங்களை உடனுக்குடன் தடுக்கவும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தஞ்சை மாவட்ட காவல்துறை அலுவலகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உரக்கச் சொல் என்ற புதிய செல்போன் செயலியை உருவாக்கி உள்ளனர். குற்றச்சம்பவங்கள் நடக்கும் பொழுதில் அங்குள்ள பொதுமக்கள், வாலிபர்கள், பெண்கள் யாராக இருந்தாலும் இந்த செயலி மூலம் உடனடியாக தகவல் அளித்தால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் விதத்தில் இந்த செயலி அமைக்கப்பட்டுள்ளது.


செயலியை டவுன்லோடு செய்யுங்க... போலீசுக்கு உதவுங்க


செல்போனில் கூகுள் ஆப் வாயிலாக உரக்கச் சொல் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் பயனர்களின் பெயர் பதிவு செய்த பின்னர் அவர்களது செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவு செய்தால் செயலி இயங்கத் தொடங்கி விடும்.  இந்த ஆப்பை பயன்படுத்துபவர்கள் தாங்கள் வழியில் பார்க்கும் குற்றச் செயல்கள், போதைப்பொருள் உபயோகப்படுத்துதல், விற்பனை, கடத்துதல் உட்பட பல்வேறு குற்ற செயல்கள் குறித்து இதில் பதிவிடலாம். மிகவும் எளிமையாக அனைவரும் பயன்படுத்தி விதத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.




பயனர்களின் தரவுகள் பதிவாகாது


இந்த செயலி வாயிலாக குற்ற செயல்கள் குறித்து பதிவு செய்பவர்களின் செல்போன் எண்ணோ அல்லது மற்ற தரவுகளோ எதுவும் பதிவு செய்யப்படாது. போதை பொருட்கள் விற்பனை, போதைப் பொருள்களை உபயோகப்படுத்துதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்பவர்கள், ரவுடிகளின் அட்டகாசம், கள்ளச்சாராயம் விற்பனை, உற்பத்தி போன்ற அனைத்து தகவல்களையும் இதில் பதிவு செய்யலாம்.


இந்தப் பதிவை செய்பவர்கள் யார் என்பது எவ்விதத்திலும் பதிவாகாது. இதனால் புகார் செய்பவர்கள் பற்றி எவ்வித தகவலும் யாருக்கும் தெரிய வராது. அந்த வகையில் மிகவும் பாதுகாப்பு அம்சத்துடன் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திவிட்டு பிரச்சனை செய்பவர்கள், சாராயம் அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள், பஸ்களில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்பவர்கள், கஞ்சா மற்றும் மதுபானம் அருந்துபவர்கள் உட்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து இந்த செயலியில் பதிவிடலாம்.


காவல் நிலையங்களுக்கு தகவல் செல்லும்...!


குற்ற சம்பவங்கள் நடந்த இடம் குறித்து தெளிவாக குறிப்பிடலாம். உடன் இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் சென்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த செயலியில் உண்மையான தகவல்களை மட்டும் பதிவிட வேண்டும். இவ்வாறு பதிவிடப்படும் தகவல்கள்  குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


செயலி எதற்காக... டிஐஜி தெரிவித்த தகவல்


இது குறித்து டிஐஜி . ஜியாவுல் ஹக் கூறியதாவது: மாவட்ட எஸ்.பி. மற்றும் சைபர் க்ரைம் போலீசார் மிகுந்த கடின முயற்சி மேற்கொண்டு இந்த செயலியை உருவாக்கி உள்ளனர்.  இது அனைவரது கரங்களிலும் பவர் கொடுத்தது போல் உள்ளது. நீங்கள் உங்கள் பகுதி ஓர் கிராமம் நகரம் போன்றவற்றில் சட்டத்தை மீறி நடக்கும் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


இதில் தகவல் தருபவர்கள் பற்றிய தகவல் ஏதும் யாருக்கும் தெரிய வராது. செயலில் கூறப்பட்ட புகார் குறித்து உடன் டிஎஸ்பி கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இதை எஸ் பி யும் கண்காணித்து வருவார். இந்த செயலியில் ரவுடிகளின் செயல்பாடுகள் குறித்தும் தகவல்கள் அளிக்கலாம். கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா யாரிடமிருந்து வந்தது யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது உட்பட அனைத்து தகவல்களும் போலீசார் திரட்டி வருகின்றனர்.


இதன் அடிப்படையில் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கஞ்சா விற்பவர்கள் குறித்தும் செயலியில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்கு அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.