தஞ்சாவூர்: தஞ்சாவூர் வைரம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை இன்று காலை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.


தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளி 2022ல் ரூ.118 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2023க்கு ரூபாய்.260 லட்சம் விற்பனை இழக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 12வது மாத சந்தா தொகையை இந்த நிறுவனம் செலுத்தி தேவைப்படும் துணிகளை 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது. 


தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது. தமிழகத்தில் 2 லட்சத்து 54 ஆயிரம் நெசவாளர்கள், அவர்கள் குடும்பத்தாருக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. கைத்தறித் துணி வகைகளின் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.




தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (Tamil Nadu Handloom Weavers' Cooperative Society), என்பது இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள பாராம்பரிய கைத்தறி நெசவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு அமைப்பாகும். இது பெரும்பாலும் கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) என்றே அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் கைத்தறி, துணிநூல், காதி, கிராமத்தொழில் (ம) கைவினைப் பொருட்கள் துறையினால் (Department of Handlooms, Handicrafts, Textiles and Khadi) இவ்வமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. இதற்குச் சொந்தமான விற்பனை மையங்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன.


கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன்கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.


இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி, மேலாளர், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கூடுநல் பொறுப்பாளர் அய்யப்பன், அரசு அலுவலர்கள், வாடிக்கையார்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்கள் ஸ்ரீதர் மற்றும் சுரேஷ் செய்திருந்தனர்.