தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. 


ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது.


மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.


நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முதல் ஒரு வார காலத்துக்கு சிலைகள் பூஜை செய்யப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பூஜைகள் வழக்கமாக, கிராமப்புற பகுதிகளிலும், நகர் பகுதிகளிலும் பலவிதமான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு 3 நாட்கள் 5 நாட்கள், 10 நாட்கள் வரை பூஜை செய்து தங்கள் ஊர்களில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். 


இந்நிலையில் விநாயகர் சதுரத்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கலந்தாலோசனைக் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில். மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது மக்கள் தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதி மன்றத்தின் பின்வரும் வழிகாட்டுதல்களை வழுவாது பின்பற்றிட கலெக்டர் கேட்டு கொண்டார்.


விநாயகர் சிலை அமைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்புடைய வருவாய் கோட்ட அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் சிலை அமைத்திட அனுமதிக்கப்படும். களி மண் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே அமைத்திட வேண்டும்.


அமைக்கப்பட உள்ள சிலைகளின் உயரமானது பீடத்துடன் சேர்த்து 10 அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். . ஊர்வலத்தின் போது நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மூன்று சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. சிலை அமைவிடம், ஊர்வலம் மற்றும் கரைக்கக்கூடிய இடங்களில் பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் வெடிப்பதற்கு அனுமதியில்லை. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.


விநாயகர் சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு பாதிப்பில்லாவண்ணம் கொண்டாடும்படி பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக்கொண்டார்.


இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்கள்  சரவணகுமார் (தஞ்சாவூர்), லட்சுமணன் (கும்பகோணம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனவளவன் (பொ) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.