தஞ்சாவூர்: தஞ்சாவூர் என்ற நகரம் தோன்றுவதற்கு முன்பு வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. அப்போது முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோயில்தான் வல்லம் ஏகௌரியம்மன் கோயில். சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள்தான் இந்த  ஏகௌரியம்மன்.


சோழ மன்னர்கள் அரசு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும், வெற்றி வாகைச் சூடப் போர்க்களம் செல்லும் போதும் இந்தத் தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துவது வழக்கம். காட்டில் அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு மேலாக அந்தச் சுதை வடிவம் இன்றளவும் மாற்றப்படாமல் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


எட்டுத் திருக்கரங்களுடன் தேவி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இந்தத் தேவி ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. அசுர குணம் கொண்டவர்களை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஒரு முகமும், அல்லல்பட்டு வரும் அடியவர்களின் துயர் தீர்க்க சாந்தமுடன் இன்னொரு முகமும் அமைந்துள்ளது. இப்படி இரு திருமுகங்களுடன் அமைந்த அம்மனை காண்பது அரிது.


முதலாம் ராஜராஜ சோழனின் 6வது ஆண்டு (கி.பி.991) கல்வெட்டில் அக்காலத்தில் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என அழைக்கப்பட்ட ஏகெளரி அம்மனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிக் கூறுகிறது. கி.பி. 1535 ஆம் ஆண்டில் செவ்வப்ப நாயக்கர் தஞ்சைக்கு அரசரானார். அவரது மகன் அச்சுதப்ப நாயக்கர் இளவரசரானார். இவர்களுடைய ஆட்சியில் வல்லம் நகரம் சிறந்து விளங்கியது. இருவரும் இணைந்து வல்லம் ஏகெüரியம்மன் கோயிலைப் புதுப்பித்தனர். 


அக்காலத்தில் ஒரு அசுர வதம் முடிந்த பின்னும் அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அப்போது, மாங்காளி வனம் என அழைக்கப்பட்ட வல்லத்தில் அலைந்து திரிந்தாள். அதனால், நீர் நிலைகள் வறண்டன. வனமெங்கும் தீப்பற்றி எரிந்தது. நிலைமையை உணர்ந்த சிவபெருமான், ஏ கெளரி சாந்தம் கொள் என்றார். அம்மனின் கோபம் சற்று தணிந்தது. அப்போது, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அங்கேயே எழுந்தருள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளின்படி, அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறார்.


அம்மன் அசுரனை வதம் செய்தது ஆடி கடைசி வெள்ளிக்கிழமை. எனவே, அன்றைய நாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து அம்மனைச் சாந்தப்படுத்துகின்றனர்.


தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருமணத் தடை உள்ள பெண்கள், இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி அம்மனின் திருப்பாதத்தில் குண்டு மஞ்சளை (குளியல் மஞ்சள்) வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து, தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, ஐதீகம்.


தீராத நோய் அல்லது திடீர் விபத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகி விட்ட கணவருக்காக வேண்டிக் கொண்டு வரும் பெண்கள் அதிகம். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பெண்கள், தங்களது கணவரை எமனிடமிருந்து காக்க வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக் கடனாக எருமைக் கன்றை காணிக்கைச் செலுத்தி வழிபடுகின்றனர்.


இங்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர். கருவறையில் ஏகெளரி அம்மனைச் சுற்றியபடி இரு நாகங்கள் இருப்பதைக் காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அம்மனைத் தரிசித்தால் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.