குறைந்த வட்டி என்று கூறி பின்னர் சிக்கலை இழுத்து விடும் ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம். வங்கியிலிருந்து அல்லது வங்கி ஊழியர் பேசுவதாக கூறி வங்கி  கணக்கு , ஏ.டி.எம். கார்டு விபரம், ரகசிய எண், ஓ.டி.பி. எண் ஆகியவற்றை கேட்டால் தெரிவிக்க கூடாது என்று தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் துண்டுபிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் ஏ.டிஎஸ்பி., சாமிநாதன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கினர். அதில், வங்கியிலிருந்து அல்லது வங்கி ஊழியர் பேசுவதாக கூறி தங்களின் வங்கி  கணக்கு , ஏ.டி.எம். கார்டு விபரம், ரகசிய எண், ஓ.டி.பி. எண் ஆகியவற்றை கேட்டால் தெரிவிக்க கூடாது.





உங்கள் இடத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளோம். பல லட்சம் முன்பணம், மாதந்தோறும் பல ஆயிரம் வாடகை தருவோம் என கூறி ஆவணங்கள் மற்றும் பணம் கேட்பார்கள். அப்படி  பணம் அனுப்ப வேண்டாம். இதே போல் உங்களுக்கு அறிமுகமான நபர்களின் பெயரில் போலி பேஸ்புக் வாயிலாக அவசர தேவை பணம் அனுப்பும் படி கேட்டால் பணம் அனுப்பக்கூடாது. தனியார் நிறுவனங்களின் பெயரில் போலியான வேலைவாய்ப்புகள் என்று வரும் குறுஞ்செய்தி,  இ-மெயில், ஆன்லைன் வேலை இணைய லிங்க் வாயிலாக விளம்பரங்களை அனுப்பி பணம் அனுப்ப கூறினாலும் அனுப்ப கூடாது.

இதேபோல், பைக்குகள், கார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாக போலி விளம்பரங்களை அனுப்பி குறிப்பிட்ட தொகை கேட்டால் பணம் செலுத்த வேண்டாம். அறிமுகம் இல்லாத எண் மூலம் வரும் ஆபாச வீடியோ அழைப்பை பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அதுபோன்ற அழைப்பை ஏற்க வேண்டாம். தனியார் கடன் செயலி மூலம் குறைந்த வட்டியில் கடனாக பெறலாம் என்று செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி கடன் வாங்க வேண்டாம்.

அவ்வாறு வாங்கும் கடன் தொகையை செலுத்த தாமதம் ஆகும் போது, பதிவு செய்த தனிப்பட்ட விபரங்கள் மூலம் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் புகைப்படங்களை திருடி ஆபாசமாக சித்தரித்து, மிரட்டி பணம் பறிக்கக்கூடும். மேலும் உங்களை பற்றி தவறான தகவல்கள் அனுப்பக்கூடும். இதனால் அதுபோன்ற செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம்.





தங்களது வங்கி கணக்கு, செல்போன் எண், புகைப்படம், முகவரி, ஆதார் மற்றும் பான்கார்டு உள்ளிட்ட விவரங்களை கேட்கும் எந்த ஆன்லைன் செயலிகளையும் பதிவிறக்கம் செய்யவேண்டாம். இதுபோன்ற மோசடிகள் மற்றும் ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற சைபர்கிரைம் போலீசாரின் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.