காதல் திருமணம்:


தஞ்சாவூர்  மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மன்னப்பன்குளத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் வீரக்குமார்(33). இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அவரை மணமுடித்துள்ளார். கூலி வேலை செய்து வரும் வீரக்குமார் அதன்மூலம் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்த சூழலில் காதல் தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரஞ்சிதா தன் காதல் கணவர் மீது கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்துள்ளார். 


மனைவி & மாமியாருக்கு நடுரோட்டில் கத்திகுத்து:


இந்த நிலையில் நேற்று அதிராம்பட்டினம் அருகே உள்ள சாலைப்பகுதியில் தனது தாய் சாந்தியுடன் ரஞ்சிதா நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வீரக்குமார் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் தன்னை பிரிந்து மனைவி தாய் வீட்டிற்கு சென்று இருப்பதால் மிகுந்த கோபத்திலும் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு முற்றவே தாய் சாந்தியும் மருமகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வீரக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி ரஞ்சிதா மற்றும் மாமியார் சாந்தியை கடுமையாக தாக்கி சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடியுள்ளார். இதில் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே சரிந்துள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சாந்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து ரஞ்சிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


காதல் மனைவிக்கு சிகிச்சை, கணவர் கைது:


இச்சம்பவம் குறித்து தகலறிந்த அதிராம்பட்டினம் காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கத்தியால் குத்திய வீரக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் மதிய வேளையில் குடும்ப பிரச்சினை காரணமாக மாமியாரை  நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காதல் மனைவியும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.