தஞ்சாவூர்: 10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது, பெண்ணை கிண்டல் செய்தவர் கைது, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தவர் கைது என்று தஞ்சை க்ரைம் பீட் பற்றி பார்ப்போம்
தஞ்சைக்கு 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் ஓட்டி வந்த நம்பர் பிளேட் இல்லாத பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர சோதனை
தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் சிறப்பு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கிய டேவிட் மற்றும் போலீசார் பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
நம்பர் ப்ளேட் இல்லாத பைக்
அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் வழிமறித்தனர். அப்போது அவர் வைத்திருந்த ஒரு பேக்கை போலீசார் சோதனை செய்த போது அதில் பொட்டலம் இருந்தது. அவற்றை போலீசார் பிரித்த பார்த்த போது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து பைக்கில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆலம்பாக்கம் கீழத்தெருவை சேர்ந்த ஞானமுத்து மகன் ரெனால்டு (25) என்பது தெரிய வந்தது. அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரெனால்டுவை தஞ்சை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
தாலுகா போலீசார் வழக்குப்பதிவு
இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெனால்டுவை கைது செய்தனர். மேலும் கஞ்சாவையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரெனால்டுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் கைது
தஞ்சாவூர் அருகே தன் பெண்ணை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவேங்கப்புடையான்பட்டியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது மகன் ஹென்றிதாஸ் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டு வம்பிழுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஹென்றிதாசை பார்த்து அந்த பெண்ணின் தந்தை இதுகுறித்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹென்றிதாஸ் அந்த பெண்ணின் தந்தை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹென்றிதாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
30 கிலோ புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் 30 கிலோ புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தவரை வல்லம் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது விஷால் என்பவரின் கடையில் இருந்து 10 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வல்லம் சிவன்கோயில் தெருவை சேர்ந்த எம்.பாலசுப்பிரமணியம் என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணியத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் 30 கிலோ புகையிலைப் பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். மேலும் 30 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.