தஞ்சாவூரில், முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்து வாங்க பணமில்லாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ் (32), ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி,32, ரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது இரண்டு வயது மகள் பாரதி. இந்த சிறுமிக்கு கடந்த 9 ம் தேதி, முதுகு தண்டுவட தசை நார் சிதைவு என்ற நோய் இருப்பது டாக்டர்களால் கண்டறியப்பட்டது. இது அந்த நோயின் தன்மை தற்போது இரண்டாம் நிலையில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
2 வயது ஆன நிலையில், இன்னும் சிறுமி இன்னும் எழுந்து நிற்காத குழந்தை பாரதி, தவழ்ந்தபடியே இருக்கிறாள். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், இவருக்கு, 'ZOLGENSMA', என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றும் மருந்தின் விலை ரூ. 16 கோடி ரூபாய் எனவும் கூறியுள்ளனர். இந்த மருந்திற்கு இறக்குமதி வரி மட்டும் ரூ.6 கோடி எனவும், மொத்தமாக இந்த மருந்தினை வாங்கி குழந்தை பாரதிக்கு செலுத்த 22 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதை கேட்டு குழந்தை பாரதியின் பெற்றோர் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
இது குறித்து குழந்தை பாரதியின் தந்தை ஜெகதீஸ் கூறுகையில், இயற்கையாக புரோட்டீன் சத்து குறைபாடு காரணமாக நோய் ஏற்பட்டது. இதற்கான ஊசி மருந்து விலை ரூ. 16 கோடி ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாது. தற்போது நண்பர்கள், உறவினர்கள் உதவியால் வெறும் ரூ. 50 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது. மீதத் தொகையை திரட்ட பொதுமக்களின் உதவியை நாடியுள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் ஊசியை செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் எப்படியாவது அதற்குள் தொகையை திரட்டி குழந்தையை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஆனால், தங்களால் இந்த 22 கோடி ரூபாயை திரட்டி முடியுமா என்பது தெரியாத நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உதவிகரம் நீட்ட வேண்டும் என பாரதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே பாதிப்பை எதிர்கொண்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி மித்ராவுக்கு மத்திய அரசு உதவியுடனும் பொதுமக்கள் கொடுத்த உதவித் தொகையின் அடிப்படையிலும் சமீபத்தில் மருந்து இறங்குமதி செய்யப்பட்டு, பெங்களூரு மருத்துவமனையில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.