ஆங்கில புத்தாண்டையொட்டி அனைவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். அதே போல் குடும்பத்தில் உள்ளவர்கள், வழிபாடுத்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வழிபடுவார்கள். ஆங்கில புத்தாண்டு 1 ந்தேதி விடுமுறை என்பதால், அனைவரும் நண்பர்கள், உறவினர்களுக்கு வீடுகளுக்கு சென்று உணவுகளை பரிமாறிக்கொண்டும், இனிப்புகளை வழங்கி வருவார்கள். இந்நிலையில், 1 ந்தேதி சனிக்கிழமை புத்தாண்டு விடுமுறை, மறுநாள் 2 ந்தேதி ஞாயிற்றுகிழமை பொது விடுமுறை என்பதால், பெரும்பாலானோர் பூங்கா, சுற்றுலா தலங்கள், பழங்காலத்து கோயில்கள், புராதன சின்னங்கள், அரண்மனைகள் போன்ற இடத்திற்கு சென்று விடுமுறை அன்று பொழுதை கழிப்பார்கள்.  அதே போல் நீர் நிலைகள் போன்ற அணைகளுக்கு சென்று நீராடியும், விளையாடுவார்கள்.




இந்நிலையில் தமிழக அரசு, தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்கிரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மூன்றாவது கட்டமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில், சமுதாய கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும். மழலையர் விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 10.01.2022 வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்படும். வழிபாட்டுத் தலங்களைப் பொருத்தவரை தற்போது நடைமுறையிலிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.


உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.  இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும். திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும், அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். அழகு நிலையங்கள் சலூன்களில் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் செயல்பட அனுமதிக்கப்படும்  ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்  என அரசு குறிப்பிடப்பிட்டுள்ளது.




இந்நிலையில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  பண்டிகை காலங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமிக்கிரான்  தொற்று நோயை கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணை பூங்கா, கல்லணை பகுதிகள் மற்றும் தென்பெரம்பூரில் உள்ள வடவாறு, வெட்டாறு, வெண்ணாறு, தலைப்பு ஆகிய பகுதிகளில்  1.1.2022 முதல் 3.1.2022 வரை பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என  தஞ்சாவூர், காவிரி வடிநிலக் கோட்டம், நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர்   சொர்ணக்குமார் தெரிவித்துள்ளார்.