தஞ்சாவூர்: கண்கள் கலங்கியது... மனம் நிறைந்தது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் செய்த செயல் மக்களின் மனதை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆய்வு பணிக்காக சென்ற போது சாலையோரத்தில் இருந்த மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜமிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கோயில்கள் நிறைந்த நகரமாகும். கும்பகோணத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோயில்கள் நிறைந்து உள்ளதால் வெளி மாநில, மாவட்ட பக்தர்களும் வருகைபுரிகின்றனர். கும்பகோணம் பகுதியை சுற்றி உள்ள கோயில்கள் பரிகார நேர்த்தி ஸ்தலங்களாக உள்ளன. இதனால் பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை நிறைவேற்ற வந்து செல்கின்றனர். ஆனால் மனம் கனக்க செய்யும் செயலையும் பலர் செய்கின்றனர். வெளி மாநிலத்தில் இருந்து வரும் பலர் தங்கள் உறவினர்கள் யாரேனும் வயது முதிர்ச்சியால் இருந்தால் அவர்களை இங்கு அழைத்து வந்து விட்டுவிட்டு செல்கின்றனர். ஞாபகத்திறன் குறைவாக உள்ளவர்கள், மனநிலை பாதிக்கப்பட்ட உறவினர்கள் என்று அங்கிருந்து அழைத்து வந்து இங்கு விட்டுச் செல்கின்றனர்.
இதனால் ஆதரவற்று அவர்கள் சாலையில் சுற்றி திரிகின்றனர். பசி எடுக்கும் போது கடைகளில் கையேந்தும் அந்த முதியவர்களுக்கு பலரும் இரக்கப்பட்டு உணவு அளிக்கின்றனர். அப்போது அவர்களிடம் யாரேனும் விசாரித்தால் அவர்கள் பேசும் மொழி புரிவதில்லை. அப்படி சாலையில் ஆதரவற்று திரியும் ஒரு சிலருக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக சாலையோர பூங்காக்களும், பயணிகள் நிழற்குடையும் இருக்கிறது. இவர்களில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் உயிருக்கு போராடி இறப்பதை கண்டு மனம் அதிர்ச்சியும் அடைகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று கும்பகோணத்திற்கு வந்தபோது சாலையோரத்தில் இருந்து 70 வயது மூதாட்டியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தஞ்சையில் இருந்து திருநாகேஸ்வரத்திற்கு ஆய்வு பணிக்காக நேற்று கும்பகோணம் வழியாக காரில் சென்றார்.
கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் நலிவடைந்த நிலையில் இருந்த மூதாட்டியை கண்டதும் வாகனத்தை உடனடியாக நிறுத்த சொல்லி டிரைவரிடம் கூறினார். தொடர்ந்து தனது உதவியாளருடன் சென்று அந்த மூதாட்டியிடம் பெயர், முகவரி குறித்து விசாரித்த போது அவர் வேறு மொழியில் பேசியுள்ளார்.
பின்னர் தனது காரில் இருந்த பிஸ்கட், தண்ணீர் ஆகியவற்றை மூதாட்டிக்கு கொடுத்தார். தொடர்ந்து கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளை வரவழைத்து மூதாட்டி குறித்து விசாரணை நடத்துமாறு கூறினார். இதனையடுத்து ரெட்கிராஸ் அமைப்பினரை வரவழைத்து மூதாட்டியை தஞ்சையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும் மூதாட்டிக்கு தேவையான மருத்துவம் உள்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு அறிவுறத்தினார். சாலையில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிபவர்களை கண்டும் காணாமல் செல்லும் அதிகாரிகள் மத்தியில் வாகனத்தை உடனடியாக நிறுத்த கூறி தானே இறங்கி சென்று தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் செய்த செயல் அப்பகுதி மக்களை நெகிழ செய்து விட்டது.