தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்களை தமிழ்நாடு அரசு நியமித்து வருகிறது. அதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறார். இடப்பிரச்சினை காரணமாக வீடு கட்ட உறவினர்கள் தடுத்ததால், பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வாட்ஸ் அப் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்த நிலையில், அவரது குடும்பச் சூழல் குறித்து கேட்டறிந்து, 24 மணி நேரத்தில் அவரது புகார் மீது நடவடிக்கை எடுத்த, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று வீட்டு மனை பட்டாவை வழங்கி அந்த பெண்ணை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். 



 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு ஊராட்சி, பட்டத்தூரணி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி மணியம்மை, குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வசித்து வரும் வீட்டினை புதுப்பித்துக் கட்ட முடிவு செய்தார். ஆனால், அந்த இடம் சம்பந்தமாக, உறவினர்கள் சிலர் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மணியம்மை, கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அனைத்து பிரச்சனைகளையும் விரிவாகப் பேசி, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 

 

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, பட்டத்தூரணி கிராமத்திற்கு, நேரடியாகச் சென்று ஆய்வு செய்ததில், அந்த நிலம் புஞ்சை தரிசு வகைப்பாடு கொண்டது எனவும், அவர் அந்தப் பகுதியில் தொடர்ந்து வசித்து வருவதாகவும், அவருக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம் என ஆட்சியரிடம் தாசில்தார் தெரிவித்துள்ளார். அதனையடுத்து வீட்டு மனைப் பட்டா வழங்க ஏதுவானது எனவும் தெரியவந்தது. மேற்படி கிராம புஞ்சை தரிசு வீட்டு மனைப் பட்டா வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அவர் கோரிக்கையை ஏற்று, வீட்டுமனைப் பட்டாவினை, சனிக்கிழமை மாலை சொர்ணக்காடு கிராமத்திற்கு, நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். வீட்டுமனைப் பட்டாவினை பெற்றுக்கொண்ட மணியம்மை, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நன்றியினை தெரிவித்தார்.

 

பொதுமக்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் தன்னை உடனடியாக தொடர்புகொள்ளலாம் என்றும்,  மாவட்ட மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதே தனி முதல் பணி என ஆட்சியர் கூறியுள்ளார்