தஞ்சையில் நடந்த பொதுமக்கள் குறை தீர் கூட்டத்தில் 342 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகள் குறித்த மனுக்களை அளித்தனர். இதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் தலைமை வகித்து பேசியதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 342 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வருவாய்த்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாபநாசம் வட்டத்தைச் சார்ந்த ஒரு பயனளிக்கு மாதாந்திர விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, தொழிலாளர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் தொகைக்கான ஆணை ஆகியவற்றை வழங்கினார். மேலும் விளிம்புநிலை மக்கள் 11 நபர்களுக்கு நலவாரிய பதிவு அட்டையையும் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்கள் (வருவாய்) சுகபுத்ரா, (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  வாரந்தோறும் நடக்கும் இந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் தஞ்சை மாவட்டத்தின் பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகள் குறித்த மனுக்களை அளிக்கின்றனர்.

 

இதில் ஏராளமான மனுக்கள் மீது தீர்வுகள் அளிக்கப்படுகிறது. முக்கியமாக மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் மீது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு கவனம் எடுத்து அவற்றுக்கு உடனடியாக தீர்வை எடுக்க உத்தரவிடுகிறார். உதவித் தொகை கிடைக்காமல் அவதியடைந்து வந்த பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு அதை உடன் கிடைக்கச் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிராமப்புறத்தை சேர்ந்த மக்களின் மனுக்கள் மீதும் தீர்வுகள் கிடைத்து வருகிறது.

பல ஆண்டுகளாக சாலை வசதி, மின் வசதி இல்லாமல் இருந்த குடியிருப்புகள் இன்று மின் விளக்கு வசதியுடன், சாலை வசதியும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனால் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரும் கிராம மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண