தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 350 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர்  தீபக் ஜேக்கப், உத்தரவிட்டார். 


கும்பகோணம் ஸ்ரீ ராமச்சந்திரன், அம்மாபேட்டை மன்சூர்அலி ஆகியோரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.9050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்  வழங்கினார்.


மேலும், சென்ற வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுவின்பேரில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்  பரிந்துரையின் பேரில் பட்டுக்கோட்டை வட்டம் பள்ளத்தூர் சத்தியமூர்த்தி என்பவரது கோரிக்கையின்படி, வடிவேல் என்பவரது பட்டா அளவு தவறாக பதிவாகியுள்ளதை திருத்தம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.


பட்டுக்கோட்டை மதுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மக்களுடன் முதல்வர் முகாமில் மனு அளித்ததன்பேரில் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட தலைவர் அறிவழகன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சந்திரன் உட்பட சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டத்திலும் தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நல சங்கம் என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். நாங்கள் உபயோகப்படுத்தப்பட்ட பைக், பஸ், லாரி, மினிவேன் போன்ற அனைத்து விதமான மோட்டார் வாகனங்களை வாங்கிக் கொடுத்தும், விற்றுக்கொடுத்தும் வருகின்றோம். ஆயிரக்கணக்கான நபர்கள் இந்த தொழிலை நம்பி வியாபாரம் செய்து வருகிறோம்.


அந்த வகையில் நாங்கள் வாகனங்களை வாங்கி கொடுத்தும், விற்றுக் கொடுத்தும் வியாபாரம் செய்யும்போது அதன் ஆவணங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் பெயருக்கு கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை முறையாகப் பெயர்மாற்றம் செய்து வருகிறோம். தற்போது அவ்வாறு ஆவணங்களை முறைப்படுத்தும் பணிக்காக அந்தந்த மாவட்டப் போக்குவரத்து அலுவலகங்களில் ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது ஆவணங்களை சரிபார்த்து எங்களிடம் வழங்காமல் வாகன உரிமையாளருக்கு தபால் மூலம் அனுப்பி வைப்பதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தெரிவிக்கின்றனர்.


இந்த நடைமுறை மாற்றம் எங்கள் வியாபாரத்திற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி தவறு செய்யும் வாகன ஓட்டுனர்களுக்கு மற்றும் முறையாக ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதால் வாகனம் வாங்கும் போது பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கே அபராதம் மற்றும் அதன் ஓடிபிகள் செல்கிறது. இதனால் பழைய வண்டிகளை வாங்கி விற்பனை செய்யும் ஆலோசகர்கள் மற்றும் வாகனம் வாங்குபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


பத்தாயிரம் ரூபாய்க்கு வாகனம் வாங்கும் போது அதற்கு அபராதமே 15000 விதிக்கப்பட்டு அது கட்டாமல் இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். இந்த நடைமுறையை கைவிட்டு பழைய நடைமுறைப்படி அபராதம் விதிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் ஆன்லைன் மற்றும் ஓடிபி முறையில் அபராதம் வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு பழைய நடைமுறையையே பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.