மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மனிதாபிமானம் மிகவும் முக்கியமானது. உயரிய அந்தஸ்தில் சமூகத்தில் மதிக்கக்கூடிய ஒருவராக இருந்தாலும் அவரிடம் மனிதாபிமானம் என்ற ஒன்று இல்லையென்றால், எந்த பிரயோஜனமும் இல்லை. மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதற்கு நேரம், காலம், இடம் என்று எதுவுமில்லை. மனிதனுக்கு எப்போது, என்ன உதவி தேவைப்படுகிறதோ அப்போது அந்த உதவியை செய்வதற்கு முன்னிற்பதே மனிதாபிமானம்.

உனக்கு நான் இருக்கிறேன் தோழா, தோழி என்று தோள் கொடுப்பதே மனிதாபிமானம். மனிதர்களிடத்தில் காணப்படுகின்ற மனிதாபிமான குணாதிசயங்களை போன்று சில சமயங்களில் விலங்குகள், பறவைகளிடத்தில் காணலாம். அது நாம் கற்பனையிலும் நினைக்க முடியாததொரு உணர்வை ஏற்படுத்தக் கூடியது.

இன்று வரை மனிதர்களுக்குள் சிறு ஒற்றுமையேனும் காண முடிகின்றதென்றால் அதற்குக் காரணம், அவர்களிடத்தில் கொஞ்சமேனும் ஒட்டிக் கொண்டிருக்கும் மனிதாபிமானம் தான். இன்றளவில் மனிதனை இயங்கச் செய்வது ஒருவர் மேல் இன்னொருவர் காட்டும் அன்பு, இரக்கம், கருணை என்பவை தான். தன்னைப் போலவே சக மனிதனையும் பார்ப்பவனே மனிதன். இதை தஞ்சை போலீசார் நிரூபித்து காட்டி விட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (50) இவர் கடந்த 1993ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். இவருக்கு மனைவி தனரேகா, ஜெகன், பி.இ., மூன்றாம் ஆண்டு, ஆதித்யா ப்ளஸ் 2 படிக்கும் இரண்டு மகனும் உள்ளனர். முருகேசனின் தாய் மாணிக்கமும் சேர்ந்து வசித்து வந்தார்.
 
தஞ்சாவூர் நகர போக்குவரத்து புலன் விசாரணை பிரிவில் எஸ்.எஸ்.ஐ.,யாக முருகேசன் பணியாற்றி வந்த நிலையில், கடந்த மார்ச் 30ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து முருகேசன் பணியில் சேர்ந்த அதே ஆண்டில் பணியில் சேர்ந்த சக போலீசார் 7.06 லட்சம் ரூபாய் நிதி திரட்டினார்.





அதை, தஞ்சாவூர் எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து, எஸ்.பி., ரவளிப்ரியா மூலம், முருகேசன் குடும்பத்தினரிடம் வழங்கி, ஆறுதல் கூறினார். இதுகுறித்து நிதியுதவி அளித்த போலீசார் கூறியதாவது;  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்  மூலமாக முதல் முதலாக, இரண்டாம் நிலை காவலராக 1993ம் ஆண்டு தேர்வான, சுமார் 3, 500 காவலர்கள் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகிறோம்.

அவர்கள் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் என வாட்ஸ்அப் குழு மூலம், கடந்த 2019ம் ஆண்டு முதல், இறந்த 50 காவலர் குடும்பங்களுக்கு இதுவரை 2.86 கோடி ரூபாயை வழங்கியுள்ளோம். இதன்படி, தற்போது கடந்த மூன்று மாதங்களில் மறைந்த ஐந்து எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு தலா 7.06 லட்சம் வீதம் வழங்க உள்ளோம். அதில் முதற்கட்டமாக முருகேசன் குடும்பத்திற்கு வழங்கியுள்ளோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தார். மனிதம் இன்னும் மரிக்காமல் இருப்பதற்கு இவர்கள் போன்ற மனிதாபிமானமிக்கவர்களே காரணம் என்றால் மிகையில்லை.