தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியின் குறுக்கே அணையை கட்டி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதி பாசனம் பெறுவதற்காகவும், வெள்ள காலங்களில் நீரை பிரித்து கொள்ளிடத்தில் விடுவதற்கும் கரிகால சோழனால் கல்லணை கட்டப்பட்டது.
இந்நிலையில் தை மாதம் இரண்டாம் நாள் உழவர் தினமாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் கரிகாலச் சோழனுக்கு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நான்காவது ஆண்டாக கரிகாலச்சோழன் சிலை, ஆர்த்தர் காட்டன் சிலை, காவிரி தாய் ஆகிய சிலைக்கு மாலை அணிவித்து, பழங்களால் படையலிட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்னர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்லணையை கட்டிய கரிகாலச் சோழனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தை இரண்டாம் நாளான உழவர் திருநாளில், இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விழாவில், காவிரி உரிமை மீட்புக்குழு பொருளாளர் மணிமொழியன், நிர்வாகிகள் நா.வைகறை, செம்மலர், அல்லூர் கரிகாலன், விஜி, விஜய், சிமியோன் சேவியர் ராஜ், பழ.ராஜேந்திரன், திருநாவுக்கரசு, திருச்சி சிவாரகுநாதன், வெள்ளம்பெரம்பூர் துரை.ரமேஷ், ரா.தனசேகரன், மு.பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
11 படகுகள் மீது நடவடிக்கை
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயலில் ஈடுபட்ட 11 படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 11 படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்ட கடல் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதாக அதிகாரிகளுக்கு தகவல்கள் வெளியானது.
மேலும் 5 நாட்டிக்கல் கடல் மைலைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டும் என்ற விதியை மீறி கரையோரங்களில் மீன்பிடிப்பதாகவும், கடலோர காவல் படைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து கடலில் தஞ்சை மீன் துறை ஆய்வாளர் துரைராஜ், வேதாரண்யம் மீன் துறை ஆய்வாளர் நடேச ராஜா, திருவாரூர் கடல் அமலாக்கப் பிரிவு காவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை செல்லக்கண்ணி வாய்க்கால் அருகே 3 நாட்டிகல் கடல் மைலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த 8 விசைப்படகுகளும், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளும் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரியவந்தது. மேலும், 3 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்துக்கு மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 1 விசைப்படகும் பிடிபட்டது.
இந்த 11 படகுகள் மீதும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.