தஞ்சாவூர் கொடிமரத்துமூலை மலைப்பகுதியில் அமைந்துள்ள பீரங்கி மேடு தற்போது தொல்லியல் துறையால் புது பொலிவுடன் காணப்படுகிறது.


தஞ்சாவூர் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது இந்த பீரங்கி மேடு. இது தஞ்சாவூர் கொடிமரத்து மூலையில் சிறு குன்று போன்ற மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பீரங்கியானது நாயக்க மன்னர் காலத்திலே உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1,600 ம் ஆண்டுகளில் ஆண்ட ரகுநாத நாயக்க மன்னர் 1645ம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த பீரங்கியை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

தேனிரும்பால் செய்யப் பெற்ற, இந்த பீரங்கியின் எடை 27 டன். இந்தியாவிலுள்ள மிகப் பெரிய பீரங்கிகளில் இதுவும் ஒன்றாகும். இன்று உலகில் உள்ள, பழைய பீரங்கிகளிலேயே, இந்த இராஜகோபால பீரங்கி, ஐந்தாம் இடத்தில் இருப்பதாக தகவல். இன்றைய தஞ்சையின், மருத்துவக் கல்லூரிக்கு அருகில் இருக்கும், மானோஜிப் பட்டி பகுதி அன்றைய கொல்லர்களின் இருப்பிடம் மற்றும் பணியிடம். தஞ்சைக் கொல்லர்களின் தொழிற் திறமையால் இரகுநாத நாயக்கரின் ஆணைக்கிணங்க உருவானது இந்த இராஜகோபால பீரங்கி மேடு.

இந்த பீரங்கி செய்யும் தொழில்நுட்பமானது அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. பொதுவாக பீரங்கிகள் வார்ப்பிரும்பு பட்டைகளால் உருவாக்கப்படும். ஆனால் இந்த பீரங்கியோ தேனிரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பீரங்கிமேடு தொல்லியல் துறையால் புது பொலிவுடன் காணப்படுகிறது.




வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு:

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் அகரமாகுடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அகரமாங்குடி ஊராட்சியில் உள்ள பொது விநியோக திட்ட அங்காடியில் உள்ள உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். அகரமாங்குடி ஊராட்சியில் உள்ள அரசு துணை சுகாதார மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டார். அதேபோல் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

அகரமாங்குடி ஊராட்சியில் பாரதப் பிரதமரின் அணைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார். மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மெலட்டூ அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் தடுப்பூசிகளின் இருப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். அகரமாங்குடி ஊராட்சியில் நெற்களம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். இதில் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.