தஞ்சாவூரில் பஸ்களை இயக்குவதில் தனியார் பஸ்கள் இடையில் ஏற்பட்ட பிரச்னையில் மற்றொரு தனியார் பஸ்சை ரிவர்சில் வந்து இடித்து தள்ளிய காட்சி சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. தொடர்ந்து இந்த இரண்டு பஸ்களையும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு, அரசு பஸ்களை விட,  தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தனியார் பஸுக்கும், மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் தான் இடைவெளி உள்ளது. இதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது பயணிகளை அதிகளவில் ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதற்காக பஸ்களை அதிக வேகத்தில் தாறுமாறாக தனியார் பஸ் டிரைவர்கள் ஓட்டுகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகள் நடப்பதும் இப்பகுதியில் நடந்து வருகிறது.


தற்போது இதையும் தாண்டி தமிழ் படத்தில் வில்லன்கள் செய்வதுபோல் தனியார் பஸ் டிரைவர்கள், பஸ்களை மோத விட்டு, அட்ராசிட்டி செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து பி.எல்.ஏ., என்ற தனியார் பஸ், வி.பி.ஆர்., என்ற தனியார் பஸும் அடுத்தடுத்த 5 நிமிட இடைவெளியில் தஞ்சையை நோக்கி புறப்பட்டுள்ளது. இதில் பட்டுக்கோட்டையில் புறப்பட்ட போதே,  டைமிங் பிரச்னை ஏற்பட்டுள்ளது.


இதனால் இரண்டு பஸ்களும் போட்டி போட்டுக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி வந்துள்ளன. பட்டுக்கோட்டை நகரப்பகுதியிலேயே, வி.பி.ஆர்., பஸ்சை, பி.எல்.ஏ., பஸ் டிரைவர் சாலை ஓரத்துக்கு ஒதுக்கி உள்ளார். இதையடுத்து, இரண்டு டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின், பயணிகளும் பொதுமக்களும் சமாதானப்படுத்தியதால், இரண்டு பஸ்களும் புறப்பட்டுச் சென்றன.


மேலும் ஒரத்தநாடு பகுதியிலும் இரண்டு பஸ்களும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டதால் அங்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சைவூர் பஸ் ஸ்டாண்டுக்குள் சென்ற பின்,  வி.பி.ஆர்., பஸ்சுக்கு பின்னால், பி.எல்.ஏ., பஸ் நின்றுள்ளது. இங்குதான் அந்த அட்ராசிட்டி நடந்துள்ளது. முன்னால் நின்ற தனியார் பஸ் டிரைவர், பஸ்சை ரிவர்சில் நகர்த்தி, பி.எல்.ஏ., பஸ்சின் முன் பக்கத்தில் டம் என்று மோதி உள்ளார். இதில், இரண்டு பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. பஸ்களில் பயணிகள் யாரும் இல்லாததால், எந்த சேதமும் ஏற்படவில்லை.


டைமிங் பிரச்னையால், பஸ்களை மோத விட்டு சம்பவத்தை பார்த்து, அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிக பயணிகள் நடமாடும் புதிய பஸ் ஸ்டாண்டில் இப்படி மற்றொரு பஸ்சுடன் மோத விட்டு சினிமா ஸ்டண்ட் காட்சி போல் டிரைவர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவறிந்த வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பஸ்சையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் நேற்று இரவு ஆர்டிஓ அலுவலகம் சென்று பஸ்களை பார்வையிட்டார். இந்த இரண்டு பஸ்களின் உரிமையாளர்களும் அரசியல்வாதிகள் என்பதால் வழக்குப்பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.