திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த போது போலீசார் அடித்ததால் மனம் உடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்ததால், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மடப்புரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா - மாதா தம்பதியினரின் மகன் 22 வயதான ராகுல்ராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகேசன் - கலைச்செல்வி தம்பதியினரின் மகள் 17 வயதான தீப்தி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
காதலி குடும்பம் புகார்:
இதுகுறித்து தகவல் அறிந்த தீப்தியின் குடும்பத்தினர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு ராகுல்ராஜ் நேற்று அழைக்கப்பட்டார். விசாரணையின் போது போலீசார் ராகுல் ராஜை அடித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ராகுல்ராஜ் விசாரணைக்கு பின்னர் நேற்று இரவு வீட்டுக்கு வந்த நிலையில், போலீசார் அடித்ததால் மனம் உடைந்து வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.
இது குறித்த தகவல் அறிந்த ராகுல்ராஜின் குடும்பத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ராகுல்ராஜை அழைத்து வந்து அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர் திருவாரூர் எஸ்.பி. அலுவலகத்திற்குள் புகுந்து நியாயம் கேட்டனர், உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்த திருவாரூர் டிஎஸ்பி மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ராகுல் ராஜின் தந்தை ராஜா கொடுத்த புகாரில், அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாலட்சுமி 20,000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் ரூ.5,000 கொடுத்ததாகவும், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ராகுல்ராஜையும் காவல் நிலையத்துக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களும் அடித்து அவமானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அவமானம் தாங்காமல் தற்கொலை:
இந்த நிலையில் அவமானம் தாங்க முடியாமல் எனது மகன் விஷம் அருந்தி இறந்துவிட்டார். இதற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் தான் காரணம் என தெரிவித்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ராகுல் ராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொரடாச்சேரி காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவாரூர் துணை கண்காணிப்பாளர் சிவராமன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் நடந்த அன்று பணியாற்றியவர்களிடம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு அதில் இளைஞர் தாக்கப்பட்டுள்ளாரா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதியாக இந்த சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என இளைஞரின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)