தஞ்சை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக, தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். எந்த சூழலையும் சந்திக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

புயல் எதிரொலியாக கடந்த 8ம் தேதி, நேற்று 9 மற்றும் இன்று 10ம் தேதி தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் மிகப்பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் அடங்கிய குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு எஸ். ஐ. , அலோக்குமார் சுக்லா, பாட்டீல் ஆகியோரது தலைமையிலான 25 பேர் அடங்கிய குழுவினர் வெள்ள தடுப்பு மீட்பு உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்களுடன் வந்தனர். அந்த குழுவினர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்தனர். தொடர்ந்து கலெக்டர் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எடுத்துரைத்து தயாராக இருக்க உத்தரவிட்டார்.

Continues below advertisement





இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் சுமார் 150 விசைப்படகுகள், 32 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் பாதுகாப்பாக கரையில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், வருவாய், உள்ளாட்சி, சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய அனைத்து துறையினரையும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பலநோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 7 புயல் பாதுகாப்பு மையங்கள், 30 படகுகள், 143 கனரக இயந்திரங்கள், 617 அறுவை இயந்திரங்கள், 99 மரம் வெட்டும் இயந்திரங்கள், 113 ஜெனரேட்டர்கள், 37 தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள், 1, 17, 325 மணல் மூட்டைகள், 30, 672 தடுப்பு கம்புகள், 4, 500 முதல் நிலை பணியாளர்கள் மற்றும் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் 200 முதல்நிலை பணியாளர்கள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

மேலும், 24 மணி நேரமும் இயங்க கூடிய மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் (04362-264115, 264117, மொபைல் எண். 9345336838) அறிவிக்கப்பட்டுள்ளது.