முறைகேட்டை மறைக்க ஆவணங்களுக்கு தீ வைத்த கூட்டுறவு வங்கி செயலாளர் உள்பட 3 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க என்று பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.



தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேட்டை மறைப்பதற்காக ஆவணங்களுக்கு தீ வைத்த செயலாளர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வளர்ச்சி வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த செப்.11ம் தேதி, அதிகாலை சுமார் ஒரு மணியளவில், வங்கியிலுள்ள ஆவணங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து திருவிடைமருதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

விசாரணையில் வங்கியின் செயலாளரான, பவுண்டரீகபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (48), ஊழியராக பணியாற்றும் பேராவூரணி அருகே கோட்டவயல் ரவிக்குமார் (29), பாஸ்கரின் மைத்துனர் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த  சம்பந்தம் (45) ஆகிய மூவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் சம்பந்தம் வங்கியின் ஆவணங்களுக்கு தீ வைத்துள்ளார் என தெரியவந்தது.

மேலும், செயலாளர் பாஸ்கர் மற்றும் ஊழியர் ரவிக்குமார், இருவரும் வங்கியில் செய்த பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பாக நடந்து வரும் விசாரணையிலிருந்து தப்பிக்க செயலாளர் பாஸ்கர், தனது மைத்துனர் சம்பந்ததிடம், ஆவணங்களுக்குத் தீவைக்க கூறியதால், தீ வைக்க முயன்ற போது, ஏற்பட்ட விபத்தின் போது, காயமடைந்த நிலையில், திருவிடைமருதுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பந்தம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாஸ்கர், ரவிக்குமார், சம்பந்தம் ஆகிய மூவரின் பேரிலும் திருவிடைமருதுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கர் மற்றும் ரவிக்குமார் இருவரையும் கைது செய்தனர். தீ விபத்தில் சேதமான ஆவணங்கள் குறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பெண் அடித்துக் கொலை:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் உத்திராபதி. அரசு பஸ் டிரைவரான இவரது மனைவி மல்லிகா (47). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மல்லிகாவிற்கும் அதே ஊரை சேர்ந்த உறவினரும், கூலித்தொழிலாளியுமான சங்கர்(50) என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி ஆவணி ஞாயிற்றுக்கிழமையன்று கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அன்று மாலை மீண்டும் சங்கருக்கும்- மல்லிகாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர், கட்டையால் மல்லிகாவை தாக்கினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மல்லிகாவை அவரது குடும்பத்தினர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா இறந்தார்.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.