மத்திய அரசு சார்பாக கடந்த 1954-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்பட்டது 1000 ரூபாய் நோட்டில் தஞ்சை பெரிய கோயிலின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டுள்ளது என்பது தெரியுங்களா, ரிசர்வ் வங்கியின் 4-வது ஆளுநரான சர் பெனகல் ராமாராவ் அதில் கையெழுத்திட்டார்.

பெரிய கோவில்... இந்த வார்த்தை உலக மக்கள் மத்தியில் வெகு பிரசித்தம். தஞ்சை தரணி மக்களாலும் உலக தமிழர்களாலும் பெருமிதத்துடன் அழைக்கப்படும் பெரிய கோயில் என்கிற பிரகதீஸ்வரர் கோவில் கி.பி 1006ம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் கட்டப்பட்டது. இன்றளவும் தமிழரின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக விண்ணுயர்ந்து யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இக்கோயில் உலக நாட்டவர்களையும் கவர்ந்திழுக்க முக்கிய காரணம் கட்டுமானம்தான் என்றால் மிகையில்லை. பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் துணையுடன் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்தாலும் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல்தான் உள்ளனர். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையைப் பற்றிய முழுமையான ரகசியம் எப்படி பிடிபடவில்லையோ, அதே போல் தான் பெரிய கோவிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மை.

இக்கோவில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். கிரானைட் கற்கள் 20ம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற நினைப்பை முறியடித்து சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தானே.




கருவறையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். பொதுவாக அஸ்திவாரம் என்பது ஒரு கட்டிடத்தின் பாரத்தை தாங்கும் ஆதார சக்தியாகும். கட்டிடம் எந்த அளவுக்கு உயரமாக கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதன் அஸ்திவாரமும் வலுவாக, ஆழமாக இருக்கவேண்டும்.

216 அடி உயரத்துடனும், முழுக்க முழுக்க அதிக எடைகொண்ட கிரானைட் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு எந்த அளவுக்கு அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும். இன்றைய கட்டுமான வல்லுநர்களை கேட்டால் 50 அடி ஆழத்திலும், 50 அடி அகலத்திலும் போட்டால் போதும் என்று சொல்வார்கள். ஆனால், இவ்வளவு பெரிய பிரமாண்டமான பெரிய கோவிலுக்கு தோண்டப்பட்ட அஸ்திவாரம் வெறும் 5 அடி ஆழம் தான் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். அது தான் அறிவியல் உண்மையாகும். அங்கு தான் நம் தமிழனின் அறிவியல் திறமை வெளிப்பட்டிருக்கிறது.

கயிற்றுக் கட்டில் பார்த்து இருப்பீர்கள். அதில் பயன்படுத்தப்பட்ட கயிறானது பார்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும். ஆனால், அந்த கட்டிலில் ஆட்கள் உட்கார்ந்த உடனேயே பாரம் தாங்காமல் உள்வாங்கிக் கொண்டு, இறுக ஆரம்பிக்கும். கயிறுகளின் பிணைப்பானது வலுவாகிவிடும். இந்த சூட்சமத்தை தான் பெரிய கோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.



கோயிலின் கட்டுமானத்தில் அடியிலிருந்து கற்களை ஒவ்வொன்றாக நூலளவு இடைவெளி விட்டு மிகவும் இலகுவாக அடுக்கும்போது, கற்கள் பாரம் தாங்காமல் இறுக ஆரம்பித்து விடும். இந்த தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். முழு கட்டுமானத்தையும் முடித்து கருவறை உச்சியில், மிகப்பிரமாண்டமான 80 டன் எடைகொண்ட, சதுர வடிவ கல், நந்தி, விமானம் என 240 டன் எடையை அழுந்தச் செய்வதன் மூலமாக பெரிய கோவிலின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பலம் பெற்றுவிடும். இப்படித்தான் பெரிய கோவிலின் அஸ்திவாரத்தை ஒட்டுமொத்தமாக கருவறை உச்சியில் கொண்டுபோய் வைத்தார்கள் அன்றைய நம் தமிழர்கள். எத்தனையோ பூமி அதிர்ச்சி, நில நடுக்கம் என உருவாகி அசைக்க முயன்றாலும் கூட அவை அத்தனையும் பெரிய கோவில் கட்டுமானத்தின் முன்பு தோற்றதுதான் மிச்சம்.

இத்தகைய அதிசயங்களையும், அற்புதங்களையும் தன்னுள் கொண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் எழுப்பிய பெரிய கோயில், வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற ஒன்றாகும். இந்த கோயிலுக்கும், கோயிலைக் கட்டிய மாமன்னனுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அவ்வப்போது தபால் தலையும், நாணயமும் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் முக்கியமான ஒரு விஷயம் தஞ்சாவூர் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டு தஞ்சை பெரிய கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது எத்தனைப் பேருக்கு தெரியும். அந்த நோட்டில் தஞ்சை பெரிய கோயிலின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4-வது ஆளுநரான சர் பெனகல் ராமாராவ் அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ‘ஏ’ ஆகும்.

1995-ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது. இக்கோயிலுக்கு 2010-வது ஆண்டோடு 1,000-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது பெரிய கோயிலின் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையும், பெரிய கோயில் மற்றும் ராஜராஜனின் உருவம் பொறித்த 1,000 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கவை.