தஞ்சை மாவட்டத்தில் குட்கா உட்பட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்ட் மதுக்கூர் பகுதியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 1.50 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க டி.ஐ.ஜி., கயல்விழி உத்தரவின் பேரில், மாவட்ட எஸ்.பி., ரவளிப்ரியா அறிவுறுத்தலின் பேரில், ஏ.டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமையில் எஸ்.ஐ., அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், எஸ்.எஸ்.ஐ.க்கள், கந்தசாமி, கண்ணன் மற்றும் போலீசார் இளையராஜா, சுந்தர்ராமன், ஆனந்தராஜ் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.





இதன்படி, மதுக்கூர் பகுதிகளில் அதிகளவில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுக்கூர் கடைவீதியில் சோதனை செய்த மளிகை கடை ஒன்றில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து மதுக்கூர் கண்ணகி தெருவை சேர்ந்த மளிகை உரிமையாளரான முருகேசன் (55), அவரது மகன் கணேசன் (29)  இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணை அடிப்படையில், பட்டுக்கோட்டை அருகே முள்ளூர் பட்டிக்காடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (40), என்பவர் மொத்தமாக குட்காவை கொள்முதல் செய்து மதுக்கூர், பட்டுக்கோட்டை சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, சிவக்குமாருக்கு சொந்தமான குடோனில் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் குடோனில் இருந்து சுற்றுப்பகுதிகளுக்கு விற்பனைக்காக இரண்டு லோடு வண்டிகளில் குட்கா ஏற்றப்பட்டு சென்றதை மடக்கிப்பிடித்தனர். வாகனங்களில் சோதனை செய்தபோது  அதில் ஒரு டன் அளவிலான குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.





தொடர்ந்து போலீார், பறிமுதல் செய்த குட்காவையும், ஆலத்துார் பகுதியை சேர்ந்த லோடு வண்டி டிரைவரான பெரமையன் (40), சிவக்குமாரின் உறவினர்களான கரிகாலன் (24), குணாளன் (21) மூவரையும் கைது செய்தனர். மேலும் லாரி, லோடு வண்டி இரண்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய குடோன் உரிமையாளர் சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.