தஞ்சாவூரில் நேற்று மாலை முதல் இரவு வரை வெளுத்த வாங்கிய மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு 8 மணிவரை சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கியது. இதனால் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 177.50 மி.மீட்டர் அளவிற்கும், குறைந்த பட்சமாக என மாவட்டம் முழுவதும் 409.90 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை நகர் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளான வல்லம், செங்கிப்பட்டி, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, தோகூர் என்று அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.


தஞ்சையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டுனர்கள் வெகுவாக திணறினர். பஸ் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. தஞ்சையில் தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி உட்பட பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இதேபோல் ரயில்வே கீழ்பாலம் பகுதியிலும் தண்ணீர் தேங்கியது.


பணி முடித்து வீட்டுக்கு திரும்ப இயலாமல் பெண்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதேபோல் நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகளும் இந்த மழையால் நனைந்து கொண்டே பஸ்களில் செல்லும் நிலை உருவானது. மேலும் சில கிராமங்களில் கனமழையால் மின்சாரமும் தடைப்பட்டது. இந்த தொடர்மழை காரணமாக குளிச்சப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும், நேற்று மதியம் முதல் பெய்த மழையால், வயல்களில் இருந்து தண்ணீர் வடியதால், இளம் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.




இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது; குளிச்சப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், வடிகால் வாய்க்கால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக துார்வாரப்படாமல் உள்ளதால், ஒவ்வொரு முறையும் மழையின் போது, தண்ணீரில் பயிர்கள் மூழ்கி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இந்நிலையில் தற்போது அரசு இப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும்,வடிகால் வாய்க்காலை முறையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.




கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். பின்னர், விவசாயிகளிடம் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க விரைவாக நடவடிக்கை என வேண்டும் என நீர்வளத் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதேபோல் கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உட்பட பகுதிகளிலும் கனமழை பெய்தது. மேலும் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, 8 கரம்பை உட்பட பகுதிகளில் ஒரு போக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை விரைந்து வடிக்க செய்தனர். மழை நின்றவுடன் நாற்றங்கால் வயல்களில் தண்ணீரை வடித்து நாற்றுக்களை பறித்து கட்டு கட்டும் பணியிலும் மும்முரம் காட்டினர். 30 நாட்கள் வயதான நாற்றுக்களை பறித்து கட்டாக கட்டி சாகுபடி வயலில் நாளை நடவுப்பணி மேற்கொள்ளும் பணிகளில் இறங்கினர்.