தஞ்சாவூர்: தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் மனைவி கண் எதிரிலேயே இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் வல்லம் அருகே பைபாஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் மற்றொரு வாலிபர் பலியானார்.
திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் என்பவரின் மகன் துரைராஜன் (39). இவர் ஊட்டியில் மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைராஜன் திருச்சிக்கு வந்தார்.
பின்னர் தனது மனைவி சங்கீதாவுடன் பைக்கில் தஞ்சை மாவட்டம் மெலட்டூருக்கு தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் திருச்சிக்கு பைக்கில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சை அருகே அருள்மொழிபேட்டை - மாரியம்மன் கோவில் புறவழிச்சாலையில் கும்பகோணம் நோக்கி வேகமாக சென்ற மினிலாரி துரைராஜன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட துரைராஜன் சாலையில் விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி சங்கீதா பலத்த காயமடைந்தார். மனைவி கண் எதிரிலேயே கணவர் விபத்தில் இறந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வந்து காயமடைந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துரைராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலை வண்ணாரப்பேட்டை ரயில்வே பாலம் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் அதன் மீது பைக் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி கோவில் மணல்மேட்டுத் தெருவை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் நேரு (38). இவர் சம்பவத்தன்று பழைய கரியப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது பைக்கில் சென்றார்.
அன்று இரவே ஊருக்கு செல்வதற்காக வல்லம் - திருவையாறு பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது வண்ணாரப்பேட்டை பாலம் பகுதியில் சாலையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த நேரு சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேரு உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாகனங்களை இயக்குபவர்கள் மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.