சங்கே முழங்கு... சங்கே முழங்கு... எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்ற பாவேந்தர் பாரதிதாசனாரின் வரிகள் உள்ளத்தில் எழுச்சியை ஏற்படுத்தும். அதுபோல் இரண்டாம் உலகப்போரின் போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்காக ஒலித்த சங்கு, நாளடைவில் பழுதாகி போக, அதை மீண்டும் பழுதுநீக்கி சுதந்திர தினத்தில் ஒலிக்க செய்துள்ளார் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம்.
 
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானம் பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் தற்போது உள்ள இடத்தில் போர் எச்சரிக்கை சங்கு அமைந்துள்ளது. கடந்த 1939 முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த உலகப் போரின் போது இரவு நேரங்களில் விமானங்களால் குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தஞ்சாவூர் நகரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக விளக்குகள் அணைக்கப்படும்‌.



விளக்குகள் அணைக்கப்படுவதற்கு முன்னதாக சங்கு ஒலிக்கும். இந்த சங்கு ஒலித்த உடனே விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. அவ்வாறு அணைக்கப்பட்டால் நகரம் இருக்கும் இடமே தெரியாது. இந்த காரணத்துக்காகத்தான் தஞ்சாவூரில் போர் சங்கு நிறுவப்பட்டது.





முற்றிலும் இரும்பு தூண்களை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது. மின்சார உதவியுடன் இந்த சங்கு ஒலித்தது. தஞ்சாவூர் நகரம் முழுவதும் கேட்கும் வகையில் நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. போர் முடிவுற்ற பின்னர் சங்கு ஒலிப்பது நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த சங்கு பணியாளர்களின் வேலை நேரத்தை நினைவூட்டும் வகையில் தினமும் காலை 10 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி என மூன்று நேரம் ஒலிக்க வைக்கப்பட்டது. 1980 -ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சங்கு ஒலிக்கவில்லை. முற்றிலும் நிறுத்தப்பட்டது. கண்டுக் கொள்வார் யாரும் இல்லாததால் பராமரிப்பு இன்றி வெகு காலமாக ஓய்விலேயே கிடந்தது.

இந்த சங்கை மீண்டும் இயக்க வேண்டும். தொழிலாளர்கள் வேலை நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும். தஞ்சை மாநகரில் மீண்டும் சங்கு ஒலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பரிசீலனை மேற்கொண்டனர். இரண்டாம் உலகப்போரின் போது ஒலித்த சங்கை மீண்டும் இயங்க செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சங்கை ஒலிக்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பழைய சங்கு சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று சுதந்திர தினத்தன்று இந்த சங்கு ஒலிக்க வைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு சுவிட்சை அழுத்தி சங்கை ஒலிக்க வைத்தார். இதில் ஆணையர் சரவணக்குமார், மாமன்ற உறுப்பினர் மேத்தா, மாநகாட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மேலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தினமும் காலை 6, 9 மதியம் 12, மாலை 6 இரவு 9 மணி என தினமும் ஐந்து முறை சங்கு ஒலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். சங்கை ஒலிக்கச்செய்ய நடவடிக்கை எடுத்த மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.