செய்வது நன்மையாக இருந்தால் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவியும் தானே. அதுபோல் மாணவர்களை அழைத்து வர வசதியாக அரசு பள்ளிக்கு தனது சொந்த பணத்தில் ஆட்டோ வழங்கிய பஞ்சாயத்து தலைவரின் நல்ல உள்ளத்திற்கு பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.



தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நாடியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு நாடியம் கிராம பகுதியை சுற்றியுள்ள பிள்ளையார்திடல், பாலகோரை, சாந்தம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் மாணவர்கள் வருகின்றனர். அதிக பஸ் வசதி இல்லாத நிலையில் சைக்கிளில் சிலரும் நடந்தும் வந்து கல்வி கற்று வருகின்றனர் மாணவர்கள்.

இதையடுத்து பெற்றோர்கள் பலரும் வேன் வசதியுள்ள தனியார் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பி விடுகின்றனர். இதனால் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தொடர்ந்து அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் என நாடியம் பஞ்சாத்து தலைவர் பிரேம்செல்வன் (43) முடிவு செய்தார். இதற்கு என்ன செய்வது மாணவர்கள் தடையின்றி பள்ளிக்கு வர போக்குவரத்து வசதி வேண்டும் என்று நினைத்தவர் தனது சொந்த செலவில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான ஆட்டோ ஒன்றை வாங்கினார். பின்னர் அதை பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமியிடம் வழங்கினார். விழாவில், பேராவூரணி தாசில்தார் சுகுமாறன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்ரமணியன், உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துக்கொண்டனர்.





இதுகுறித்து பிரேம்செல்வன் கூறியதாவது; எங்கள் கிராம பள்ளியில் 10ம் வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 5 ஆயிரம், இரண்டாம் பரிசு 4 ஆயிரம் என வழங்கி வருகிறேன். பெற்றோர்களை இழந்த நிலையில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு மாததோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறேன். மாணவர்களுக்கு காலையில் பள்ளிக்கு வந்த பிறகு கூழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெகு தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்காக ஒரு லட்சம் ரூபாயில் ஆட்டோ வழங்கியுள்ளேன். இதற்காக நியமிக்கப்பட்ட டிரைவர் சம்பளம், ஆட்டோ பாரமரிப்பு செலவுகளை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கிராமமக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் கல்வி நலனின் அக்கறை கொண்டு, அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளையும் செய்து வரும் பஞ்சாயத்து தலைவர் பிரேம்செல்வனை அனைத்து கிராம மக்களும் மனதார பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். நல்ல மனதுடன் மாணவர்கள் கல்விக்காக சிரமப்படக்கூடாது என்று உழைத்து வரும் பஞ்சாயத்து தலைவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டும், வாழ்த்தும் குவிந்து வருகிறது.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண