திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 170 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வந்ததன் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் அமைச்சர் தலைமையில் ஆய்வுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 20 தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிய நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கைகள் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக படிப்படியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இன்று ஒரே நாளில் 170 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1880 நபர்கள், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நன்னிலம்,  குடவாசல்,  திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 386 நபர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று மட்டும் மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.



மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரை35,404 நபர்கள் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 33 ஆயிரத்து 240 பேர் பூரண குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 784 நபர்கள் உயிரிழந்துள்ளனர், அதேநேரத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை  முற்றிலும் குறைந்து வருவதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 11 மாவட்டங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த 11 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டம் ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டதாக 1100 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து அரசின் உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிலரைத்தவிர பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பை தொடர்ந்து அளித்து வருகிறார்கள் இதே நிலைமை நீடித்தால் இன்னும் சிறிது நாட்களில் திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறும் தற்போது அளித்துவரும் ஒத்துழைப்பினை தொடர்ந்து வழங்குமாறு பொதுமக்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.