தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் தங்கி, பொதுமக்களிடம் ஆன்மிக, தன்னம்பிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தியதை நினைவு கூறும் வகையில் வரும் பிப்ரவரி மாதம் 3,4,5 ஆகிய தினங்களில் 125 ஆண்டு விழா ராமகிருஷ்ண மடம் சார்பில் கொண்டாடப்பட உள்ளது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றி, இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்து தாயகம் திரும்பி 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி கும்பகோணத்துக்கு வருகை புரிந்து 3 நாட்கள் தங்கினார். அப்போது நகரின் முக்கிய பிரமுகர்கள் சார்பில் அளித்த வரவேற்புக்கு, பதிலுரை அளிக்கும் வகையில் குடந்தை போர்ட்டர் டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில், சுவாமி விவேகானந்தர் வேதாந்தத்தின் பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார்.குறிப்பாக எழுமின், விழிமின், குறிசாறும் வரை நில்லாது செல்மின் என்ற அவரது சொற்றொடர் கும்பகோணத்தில் தான் முதன் முதலில் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.சிகாகோ சென்று சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-ம் ஆண்டு வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.




இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி விவேகானந்தரின் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா அமைப்பின் மாநில முதன்மை பொது செயலாளர் பாலா தலைமையில், டாஸ்மாக் கடையை பூட்டுவதற்காக சங்கிலி பூட்டுடன், விவேகானந்தர் போல் வேடமிட்டு நுாதன போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நகர தலைவர் பிரபாகரன், மாவட்ட மாணவரணி தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கும்பகோணம் கோட்டாட்சியரிடம் சங்கிலி பூட்டுடன், விவேகானந்தர் போல் வேடமிட்டவர்கள், டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோரிக்கை மனு அளித்தனர்.




இது குறித்து பாலா கூறுகையில், வீரத்துறவி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவை, மத்திய அரசு இளைஞர்கள் தினமாக அறிவித்து கடைப்பிடித்து வருகிறது. விவேகானந்தரின் 159ஆவது ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.  இளைஞர் தினத்தன்று இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் விடுமுறை அளிக்க வேண்டும். விவேகானந்தரின் மணிமண்டபத்தை கட்ட வேண்டும்.  இது தொடர்பாக பல ஆண்டுகளாக போராட்டம் நடந்தி வந்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளன.




வருடத்தில் பல்வேறு ஆன்மீக தினம், தலைவர்கள் தினத்தன்று விடுமுறை அளிக்கும் அரசு, விவேகானந்தரின் ஜெயந்தி அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடர்பாக கும்பகோணம் கோட்டாட்சியரிடம், விவேகானந்தர் போல் வேடமிட்டவர்கள், சங்கிலி பூட்டுடன் மனு வழங்கியுள்ளனர். தமிழக அரசு டாஸ்மாக் கடையை விவேகானந்தர் ஜெயந்தி விழா அன்று மூடாவிட்டால், கடையை பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.