தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்ற நுழைவாயிலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின்படி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் தஞ்சையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் அருகே மாயாண்டி என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது. இக்கொலை சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். மேலும் நீதிமன்றங்களில் உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.


நீதிமன்றங்களில் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்யும்வரை இடைக்காலமாக மாவட்ட நீதிமன்றங்களில், முக்கியமான இடங்களில், தேவையான எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, துப்பாக்கி ஏந்திய போலீஸாரை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதையடுத்து தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு கை துப்பாக்கி மற்றும் எஸ்எல்ஆர் துப்பாக்கியுடன் பத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


ஆயுதப்படை சேர்ந்த போலீசார் மெட்டல் டிடெக்டருடன் நீதிமன்றத்திற்கு வருபவர்கள் கொண்டுவரும் பொருட்களை சோதனை செய்து உள்ளே அனுப்பி வருகின்றனர். பெரிய அளவிலான பெட்டி எடுத்து வந்தால் அதனை பிரித்து ஆய்வு செய்த பிறகு உள்ளே அனுப்புகின்றனர். இவ்வாறு தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.