தஞ்சாவூர்: அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமான உணவை உண்ணுவதற்கு இயற்கை விவசாயம் ஒரே வழியாகும். இயற்கை விவசாயத்தில், ஒவ்வொரு செயற்கை இரசாயனமும் தவிர்க்கப்படுகிறது. உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் சுத்தமான விவசாயம் முழுவதும் இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன. தூய இயற்கை விவசாயம்தான் அதிக விளைச்சல் தரும். இது ஒரு தூய்மையான இயற்கை விவசாயம் என்று குறிப்பிடப்படுகிறது.
முழுமையாக 20 ஏக்கரில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் தஞ்சை மாவட்டம் குருவாடிப்பட்டியை சேர்ந்த ம. ஆசைத்தம்பி (55)யை சந்தித்தோம். இனி அவர் கூறியதில் இருந்து... நம்ம நாட்டோட முதுகெலும்பு விவசாயம்ன்னு சொன்னால் யாராலும் மறுக்கமுடியாது. விவசாயமானது ஆரோக்கியமான வகையில் மனிதருக்கு பயன் அளிக்க வேண்டும். அதற்கு இயற்கை விவசாயம் முறைகள்தான் சிறந்ததாகும். நான் கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை பண்ணை தொழில்நுட்பங்கள் குறித்து படித்தேன். இயற்கை விவசாயம் என்பது நம் முன்னோர்கள் எவ்வித ரசாயன பொருட்களும் இன்றி மேற்கொண்ட விவசாயம்தான். ஆனால் காலப்போக்கில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் ரசாயனம் உணவு பொருட்களை ஆக்கிரமிச்சிடுச்சு.
இன்னைக்கு அனைத்து பொருளிலும் ரசாயனம் கலந்து இருக்கு. ஆரோக்கியமான உலகம் அமையணும்ன்னா அதுக்கு இயற்கை விவசாயம்தான் சரியான வழியாகும். அதனால்தான் எங்க கிராமமான குருவாடிப்பட்டியிலும் அருகில் உள்ள திருமலைசமுத்திரத்திலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ள ஆரம்பிச்சேன். 3 போகம் சாகுபடி செய்யறேன். குறுவை, சம்பா அப்புறம் கோடையில் எள், உளுந்து, நிலக்கடலை என்று சாகுபடி செய்யறேன். முதல்ல நிலத்தை 2 முறை உழணும். அப்படி செய்யும் போது நுண்ணூட்டங்கள் மண்ணில் இருந்து மேற்புறம் வரும். இது விதைக்கும் போதும், பயிர்கள் வளரும் போதும் நன்மை அளிக்கும்.
பசுந்தாள் உரத்தை (40நாட்கள்) வயலிலேயே மடக்கி உரமாக்கிடுவேன். இப்படி செய்யறதால் நிலத்திற்கு கூடுதல் மகசூல் தன்மை கிடைக்கும். குறுவைன்னா ஒருமாதிரி சாகுபடி செய்யாம நம்ம பாரம்பரிய நெல் ரகம், பல்கலைக்கழக புதிய கண்டுபிடிப்பு ரகங்கள்ன்னு மாற்றி, மாற்றி செய்வேன். இப்போ குறுவைக்கு கோ 51, ஏடிபி 56 ரகங்கள் சாகுபடி செய்துள்ளேன். இந்த ரகங்கள் சன்ன ரகம், சாயாமல் வலுவாக நிற்கும். 20 கிலோ விதை நெல் போதும். 130 வயதுடைய ரகங்கள். 13 சதம் ஈரப்பதம் இருக்கிற விதை நெல்லை இரண்டு முறை மாலை நேர வெயிலில் காய வைத்து சணல் சாக்குப்பையில் சேகரிச்சு எடுத்துக்கணும். இப்படி மாலை நேர வெயிலில் காயவைப்பதால் விதையில் உள்ள சத்துக்கள் அப்படியே இருக்கும். இதனால் முளைப்பு திறன் நன்றாக இருக்கும்.
இதுக்கு அப்புறமா 24 மணிநேரம் விதைகளை ஊற வைத்து, 24 மணிநேரம் முளைக்கட்டுவோம். அதற்கு பிறகுதான் தயார் படுத்தி வைத்திருக்கும் நாற்றங்காலில் விதைப்பு செய்வோம். இப்படி செய்யும் போது விதையோட சத்துக்கள் முறையாக அப்படியே இருக்கும். விதைத்த 10ம் நாள் நாற்றங்காலில் பொடி செய்த 5 கிலோ கடலைப்புண்ணாக்கு, 5 கிலோ வேப்பம்புண்ணாக்கை தெளிப்பேன். இதனால் வேப்பம் புண்ணாக்கு தெளிப்பதால் பூச்சி தாக்குதல் இருக்காது. கடலைப்புண்ணாக்கு பயிர்களுக்கு ஊட்டம் அளிக்கும். 25 நாட்களுக்கு பின்னர் நாற்றங்காலில் இருந்து நாற்றுக்களை பறித்து வரிசை நடவு முறையில் நடவு செய்வேன். ஒரு ஏக்கருக்கு மண்புழு உரம் 500 கிலோ தெளிக்க வேண்டும். இதற்கு பிறகு 15ம் நாளில் ஒரு ஏக்கருக்கு கடலைபுண்ணாக்கு 100 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 50 கிலோ, கடற்பாசிஉரம் (இயற்கை உரம்) 10 கலந்து தெளிக்கணும். இப்படி செய்யும் போது பயிர்கள் நல்ல வாளிப்பாக வளரும். மேலும் ஏக்கருக்கு 10 எண்ணிக்கையில் மஞ்சள் நிற அட்டை நட்டு வைப்பேன். இதனால் பூச்சிகள் கவர்ந்து இழுக்கப்பட்டு அழிக்கப்படும். பயிர் நட்ட 25 ல் இருந்து 30ம் நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில் வேப்பஎண்ணெய் கரைசலை கலந்து தெளிக்கணும். இப்படி செய்யும் போது பயிர்களை பூச்சிகள் தாக்காது. 40ல் இருந்து 50ம் நாளில் மண்புழு உரம் 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 10 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தலா 5 கிலோ தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால் நெல் நுண்ணூட்டம் பெறும். பயிர்கள் கதிர் ஆக 30 நாட்கள் ஆகும். இந்த கதிர் பருவத்தில் மீன் அமிலம், பஞ்சகவ்யா இதில் ஏதாவது ஒன்றை 2 கிலோ அளவில் தெளிக்க வேண்டும். இப்படி செய்வது பயிர் விளைச்சலை அதிகரிக்கும். இதுக்கு பிறகு அறுவடைதான். இப்படி இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்யும் போது நிலத்தின் தன்மை உயர்ந்து கொண்டே இருக்கும்.
இப்போ 20 ஏக்கரில் குறுவை அதற்கு பிறகு சம்பா சாகுபடி செய்ததில் கிடைக்கும் நெல்லை 15 வகையான தொழில்நுட்பத்தை மேற்கொண்டு மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறேன். விதை நெல், அரிசி, புட்டு மாவு, கொழுக்கட்டை மாவு, கூழ் மாவு, அதிரச மாவு, முறுக்கு மாவு, இடியாப்ப மாவு, அவல் என்று பல ரகங்களில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் போது ஒவ்வொரு தொழில்நுட்பத்திற்கும் ஏற்றார் போல் லாபம் அதிகரிக்கும். தேவைக்கு தகுந்தார் போல் பொருட்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும்.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் இருந்து கிடைக்கும் மதிப்புக்கூட்டப்பட்டவைக்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர். பாரம்பரிய விதை நெல், பல்கலைக்கழக ரகங்கள் என்று அனைத்தும் நல்ல மகசூலை அளிக்கும். இந்த இயற்கை விவசாயம் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையில் இருந்து இடைநிலை செலவுகள் அனைத்தும் போக ஒரு சாகுபடிக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. விவசாயிகள் மாற்றி யோசித்து செய்தால் நிச்சயம் வெற்றிதான். இவ்வாறு அவர் கூறினார்.