திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, நிபந்தனையின்றி ஐந்து பவுனுக்கான நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பேராவூரணி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியை இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், அப்பகுதி மக்கள் விவசாய சாகுபடி செய்வதற்கும், சிகிச்சை பெறுவதற்கும் தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து வருகின்றனர்.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தது.




தற்போது பல்வேறு நிபந்தனைகளை விதித்து, நகை கடன் தள்ளுபடி கிடைக்காமல், வங்கி அலுவலர்கள் அலைகழிக்கின்றனர். பல முறை வங்கி சென்று அலுவலர்களிடம் கேட்டால், பல்வேறு காரணங்களை கூறி அனுப்பி விடுகிறார்கள். எனவே தள்ளுபடி ஒரு சிலருக்கு மட்டும் நகைகளை தள்ளுபடி செய்து விட்டு, மற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யாமல் பொது மக்களை ஏமாற்றும், வங்கி அலுவலர்கள்  ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக, அப்பகுதியைச் சேர்ந்த, பெண்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது தமிழக அரசு விதித்துள்ள புதிய நிபந்தனை காரணமாக 35 கிலோ அரிசி வாங்கியவர்களுக்கும், 40 கிராமுக்கு மேல் அடகு வைத்தவர்களுக்கும் கடன் தள்ளுபடி இல்லை என்று கூட்டுறவு வங்கியில் தெரிவித்ததாகவும், கடன் தள்ளுபடி பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என கூறி, வங்கி வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு 40 கிராம் நகைக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மீதமுள்ள கடனை செலுத்துவதாகவும் கோஷமிட்டனர்.


 



இதையடுத்து, தகவல்  அறிந்த அங்கு வந்த பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானம் செய்தார். இதையடுத்து அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர். இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறுகையில்,தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பல்வேறு காரணங்களை கூறி அலைகழிக்கின்றனர். 40 கிராம் நகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும். எங்களை போன்ற ஏழைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று இம்முறை மாற்றி வாக்களித்தோம். கஜா புயல், கொரோனா தொற்று போன்ற காரணங்களால் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றோம். தேர்தல் வாக்குறுதி அளித்த வாக்குறுதியின் படி நகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும். திமுக அரசு நம்பி வாக்களித்த நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நகைகளை தள்ளுபடி செய்யாவிட்டால், தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை. நகைகளை தள்ளுபடி செய்வதில் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் மட்டும் தள்ளுபடி செய்து விட்டு, மற்றவர்களுக்கு பெயர் இல்லை என்றும், தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறுவது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றனர்.