தஞ்சையில் ஐ.டி. ஊழியர் வீட்டு கதவை உடைத்து பதிமூன்றரை பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




தஞ்சை மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜேஷ் குமார் (32). ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்து வேலை பார்க்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டிற்கு ராஜேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் சென்று தங்கினார்.

பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த பதிமூன்றரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ராஜேஷ் குமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிசென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





செல்போன் பறித்து சென்ற மர்மநபர்கள்

தஞ்சையில் ரியல் எஸ்டேட் செய்து வருபவரிடம் பேச்சு கொடுத்து செல்போனை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை- மருத்துவக்கல்லூரி சாலையை சோ்ந்தவர் அழகிரி (56). ரியல்எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தன்னுடைய பைக்கில் மருத்துவக்கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேம்பாலம் அருகே பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அழகிரியை நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது திடீரென அந்த மர்மநபர்களில் ஒருவன் அழகிரியின் சட்டை பையில் இருந்த செல்போனை சட்டென்று பறித்தான். அழகிரி சுதாரிப்பதற்குள் இருவரும் பைக்கில் தப்பி விட்டனர்.

இதுகுறித்து அழகிரி தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பைக் திருட்டு: தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (62). இவர் பைக்கில் ரெயில் நிலையம் பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்கு சென்று விட்டு திரும்பினார். அப்போது அவரது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடிப்பார்த்தார். இருப்பினும் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.