1021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.அகிலன் தெரிவித்துள்ளதாவது:

பொது சுகாதாரத்துறையிலுள்ள காலிப்பணியிடங்களுக்கு எம்.ஆர்.பி  தேர்வு நடத்தி புதிதாக மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்த கோரிக்கை விடுத்து வந்தது. இதன்பலனாக மருத்துவப்பணியாளர்கள் தேர்வாணையம் 1021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

தேர்வு நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் முதன்மைச் செயலாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு வரவேற்பும் கூறப்பட்டுள்ளது. இந்த 1021 எம்.பி.பி.எஸ் உதவி மருத்துவர்  காலிப்பணியிடங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கும் முதுநிலை மருத்துவ மேற்படிப்பு  கலந்தாய்வு முடிவில் வெகுவாக உயரும் வாய்ப்புள்ளது.

அரசுப்பணிக்காக காத்துக் கொண்டிருக்கும் இளம் மருத்துவர்கள் இவ்வாய்ப்பை தவறவிடாமல் பங்குபெறலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதிலிருந்து, தரவரிசை, உத்தேசம் பட்டியல், கலந்தாய்வு , பணியில் இணைவது வரை தமிழ்நாடு மருத்துவ‌ அலுவலர் சங்கம் அனைவருக்கும் பொறுப்பாளர்களாக இருந்து வழிகாட்டும். பணியில் இணைந்த பின்னர் பணியிடத்தில் ஏற்படும் சவால்களை, எதிர்கொள்ளவும், மேற்படிப்பில் சர்வீஸ் இட ஒதுக்கீடு உட்பட உரிமைகளை  காக்கவும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றலாம். முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் குக்கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 808 மருத்துவர்கள் மருத்துவ மேற்படிகளுக்கு செல்கின்றனர்.


 





தமிழ்நாடு மருத்துவர் அலுவலக சங்கம் 2017ல் பறிபோன  கிராமப்புற மருத்துவ சேவையான 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை மாநில உரிமையை மீட்க உச்சநீதிமன்றம் சென்று 2020ல் தீர்ப்பை பெற்று மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பின் மூலம் தமிழக அரசு 463 என்ற அரசாணையின் அடிப்படையில் மாநில அரசுகள் 50% இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கலாம் என்று ஆணை பிறப்பித்தது.

கடந்த இரண்டு வருடங்களாக அரசு சாரா மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசு 50% இட ஒதுக்கீட்டு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை நடத்தியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழக்கில் தமிழக அரசுடன் இணைந்து தமிழ்நாடு மருத்துவ அலுவலக சங்கம் வாதியாக கலந்தாய்வு அனுமதி வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை அவசர அவசியம் கருதி மழை, வெள்ளம், காய்ச்சல் காலங்களில் தொய்வின்றி பணியாற்றுவதற்கு ஏதுவாக துரித பாணியில் நவம்பர் மாதத்தில் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். அதே போல் 28 புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற்று தமிழக அரசு பெற்றுள்ளது.

அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான 20 ஆயிரம் அரசு மருத்துவர்கள் முதன்மையாக ஏற்க கூடிய டாக்டர் கலைஞர் கால  முறை ஊதிய அரசாணை 354 ஐ நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையில் அரசு மருத்துவர்கள் பணி புரிந்து வருகிறோம். அனைத்து அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வரின் மேலான சிறப்பு கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.