தஞ்சையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

தஞ்சாவூர்: தஞ்சையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி தொடங்கியது

Continues below advertisement

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் வரை நடக்கும் இந்த கண்காட்சியை எம்.பி., கல்யாணசுந்தரம், திருவையாறு எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன்,  துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்றார். இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வாழ்த்துரை வழங்கினார்.

இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்து சுதந்திரப் போராட்டப் போராட்டத்தில் பங்குபெற்ற ஏ.வி. ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, வாணியம்மாள், சொர்ணம்மாள், கணபதி, வாட்டாகுடி இரணியன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

Continues below advertisement



இதேபோல் பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டனர். மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் சத்தியா, முன்னாள் கவுன்சிலர் வீரையன், ஒன்றிய செயலாளர் முரசொலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய மக்கள் தொடர்பகம் ஆனந்த பிரபு நன்றி கூறினார். கண்காட்சியை பொதுமக்களும் பார்வையிட்டு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி தெரிந்து கொண்டனர்.

கண்காட்சியை பார்வையிட்ட மாணவ, மாணவிகள் கூறுகையில், தெரிந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை தவிர்த்து அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் அவர்களின் தியாக வரலாறு குறித்து அறிந்து கொள்ள இந்த கண்காட்சி ஏதுவாக இருந்தது. மேலும் பல்வேறு திட்டங்கள் பற்றியும் அறிந்து கொண்டோம். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி, வாழ்க்கை மற்றும் சொத்துக்களை இழந்தவர் குறித்து அறியும் போது மனதிற்குள் வீர வேட்கை ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola