நம் நாட்டு கலாசாரத்தின் அடையாளமாக ஸ்ரீ ராமபிரான் திகழ்கிறார் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176 ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது: இந்த இடத்தில்தான் தியாகராஜ சுவாமிகள் ராமபிரானை மனதில் கொண்டு ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை பாடியுள்ளார். ஒவ்வொருவரின் இதயத்திலும் ராமபிரான் இடம்பெற்றுள்ளார். நம் நாட்டின் கலாச்சாரத்தின் அடையாளமாக ராமபிரான் திகழ்கிறார். ராமபிரானால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நம் நாட்டு மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நாடு எந்த ஒரு சர்வாதிகாரிகளாலும் உருவாக்கப்படவில்லை. ரிஷிகளாலும், தியாகராஜ சுவாமிகள் போன்ற கவிகளாலும்தான் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல்கள் உள்பட அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த நாடு தோற்றுவிக்கப்பட்டது. இந்த சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது. அனைத்து மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே நம் பாரதத்தின் வளர்ச்சியாக இருக்கிறது.
பக்திதான் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது. இந்த பக்தி மூலம் தியாகராஜ சுவாமிகள் ஏராளமான கீர்த்தனைகளை பாடி கர்நாடக இசை உலகுக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளார். பக்தி மூலம் அவர் இறைவனை அடைந்தார். இவரைப் போன்ற பக்தர்களால்தான் இந்த பாரதம் உருவாக்கப்பட்டது.
ராமபிரான் மீதான பக்தி நாடு முழுவதும் நிலவுகிறது. எனவே நம் பாரதம் ஆன்மீக உணர்வுடன் கூடிய புண்ணிய பூமியாக திகழ்கிறது.
நமது பாரத நாடு 18 ஆம் நூற்றாண்டு வரை உலகத்துக்குத் தலைமை தாங்கக்கூடிய வல்லரசாக திகழ்ந்தது. அதன் பிறகு வந்த காலனியாதிக்கத்தால் பின்னடைவு ஏற்பட்டது. நாமெல்லாம் சோழ வம்சத்தினர். இன்னும் 25 ஆண்டுகளில் நம் நாடு உலக அளவில் தலைமை தாங்கும் நிலை உருவாக உள்ளது என்றார் ஆளுநர்.
ஸ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.