“புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தினாங்க. ஆனால் விலை மதிப்பை குறைச்சு போட்டு இருக்காங்க. இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியைச் சுற்றி, மூன்றாம் கட்டப் புறவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டும் மதிப்பை விட குறைந்த அளவிலான தொகையே நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனால், கொற்கை மற்றும் அண்ணலக்ரஹாரம் ஊராட்சியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
இதையடுத்து, சங்கத்தின் மாநிலச் செயலர் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாசிலாமணி நிருபர்களிடம் தெரிவித்ததாவது: கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம், மேல கொற்கை கிராமங்களில் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு மறு வாழ்க்கை நடத்துவதற்கான உதவித்தொகை கூட கொடுக்கப்படவில்லை. ஒரு சதுர அடி ரூ.33க்கும், ஒரு குழி ரூ.440 விலைக்கும் எடுக்கப்படுகிறது. ஆழ்குழாய் நீர் உள்ள இடம் இது. கும்பகோணம் நகரத்தின் அருகிலுள்ள இடத்தை இந்த விலைக்கு எடுத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி, இந்த நிலம் எடுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 2013 ஆம் ஆண்டு சட்டப்படி எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சட்டப்படிதான் இந்த நிலத்தை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பக்கத்திலுள்ள நிலங்கள் சதுர அடி ரூ. 500, ரூ. 800 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளிடம் அரசு சதுர அடி ரூ. 33க்கு வாங்குகிறது. எனவே, அரசு மறு ஆய்வு செய்து, மத்திய அரசு சட்டப்படி என்ன விலை கொடுக்கப்படுகிறதோ, அதேபோல மாநில அரசுத் திட்டத்துக்கும் கூடுதல் தொகையாக குறைந்தபட்ச சதுர அடிக்கு ரூ. 500 விலை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு சாகுபடி செய்யும் போது ஏற்படும் இழப்புகள் ஒருபுறம் என்றால் இதுபோல் சாலை அகலப்படுத்தல் உட்பட பல பணிகளுக்கு நிலம் கையப்படுத்தப்படும் போது அதற்குரிய உரிய விலை அளிக்காவிடில் அவர்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். சிறிய அளவில் பெட்டிக்கடை வைக்க வேண்டும் என்றாலே குறைந்தது ஒரு லட்சம் ரூபாயாவது தேவைப்படும். ஆனால் விவசாயிகளிடம் இருந்து அரசு கையக்கப்படுத்தும் நிலத்திற்கு மிகவும் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்படுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் வடக்கு மாவட்ட அமைப்பாளர் சாமு. தர்மராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, ஏஐடியுசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், துணைச் செயலர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்