மீட்ட பணத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். தகுதியானவர்கள் என்று கூறி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் நகைகளை வழங்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வரும் 14ம் தேதி தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.



தஞ்சை மாவட்டம் ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், விவசாயிகளிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.40 லட்சத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் 14ம் தேதி தஞ்சாவூரில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: "தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் (டி-1472) தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள் பெற்ற கரும்பு பயிர்க் கடன் தள்ளுபடித் தொகை  ரூ.40 லட்சத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வழங்காமல், சங்கச் செயலாளர் மோசடி செய்து விட்டார்.

இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, மாவட்ட கலெக்டர்,  கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சங்கச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணம் மீட்கப்ப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்தப் பணம் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே மீட்கப்பட்ட பணத்தை, சம்பந்தப்பட்ட விவசாயிகள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.இதே போல், சில ஆண்டுகளுக்கு முன்பு, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன், கரும்பு விதைக்கான பணம் விவசாயிகளுக்கு வழங்காமல், மோசடி செய்துள்ளதாகவும் புகார்கள் உள்ளன. இது குறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.  

இதேபோல், குருவிக்கரம்பை (டி-1230) தொடக்க வேளாண் கடன் சங்கத்தில், தமிழக அரசு அறிவித்த 2020ம் ஆண்டுக்கான விவசாய நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில், தகுதியுடைய விவசாயிகள் என்று கூட்டுறவு சங்க இணைப் பதிவாளரால் பரிந்துரை செய்யப்பட்டு, விவசாய நகைக் கடன் பெற்ற 39 விவசாயிகளுக்கு ஓராண்டு காலமாக நகைகளை திரும்ப வழங்காததை கண்டித்தும், இந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிர்க் கடன் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ம் தேதி காலை 9 மணி முதல் தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்பார்கள்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.