தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு விடுதி வார்டனின் தொல்லையே காரணம் என்று முதலில் தகவல்கள் பரவியது. பின்னர், மாணவியை மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தியதாலே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“மாணவி பேசிய வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? எப்படி எடுக்கப்பட்டது? குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக எந்தவொரு குற்றச்சாட்டும் கிடைக்கப்பெறவில்லை. மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 305 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா அளித்த தகவலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில்,
காவல்துறைக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
1. சிறுமியின் வீடியோ கிராப் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் உள்ளது. இது போலியானது என்ற முடிவுக்கு எஸ்பி வந்தாரா? ஆம் எனில், எப்படி?
2. பெற்றோர் மற்றும் அனைத்து நெருங்கிய உறவினர்களும் தெளிவான அறிக்கையை அளித்துள்ள நிலையில், எஸ்பி தனது பெற்றோரை பொய்யர்கள் என்று குற்றம் சாட்டுகிறாரா? மிகவும் வருத்தம் மேடம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று சில அமைப்புகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்