தமிழகத்தில் பருவமழை குறைவு, அதனால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் வற்றிப்போய் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்ட நிலையில் பெய்கின்ற ஒவ்வொரு துளிநீரின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்கள் உணருகின்ற தருணமாக இது உள்ளது. தண்ணீர் இல்லாத ஒற்றை காரணத்தால் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் உணவகம் தொழிற்சாலைகள் தண்ணீர் இன்றி மூடப்பட்ட நிலையில், திருவாரூரில் இந்த சூழலில் மழைநீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த சிலர் மழைநீரை சேமித்துப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.
அந்தவகையில், திருவாரூர் விஜயபுரம் சாலையில் கடந்த 5 தலைமுறைகாளாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க நா.கோ. சிவராமன் இனிப்பகம். இதனுடைய உரிமையாளர் ரவீந்திரநாத் அவர்களும் அவருடைய மகன் ராகுலும் மழைநீர் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தங்களது இனிப்பகத்தில் திண்பண்டங்கள் தயாரிக்க, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி அந்த தண்ணீரை பயன்படுத்தியே இனிப்புவகைகளும், கார வகை திண்பண்டங்களும் தயாரிக்கின்றனர். மேலும் கடைக்கு வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு பருகக் கொடுக்கும் குடிநீரும் மழைநீர்தான் என்பது ஆச்சரியம் கலந்த உண்மையாகவுள்ளது. இதற்காக அந்தக் கடையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சுத்திகரிப்பு அமைப்பு கடையின் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் தேக்கத் தொட்டியின் மேல்பகுதியில், இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிக்கும் வகையில் மணல், கரி, கூழாற்கற்கள் ஆகியவற்றை கொண்டு நிரப்பட்ட ஒரு வடிகட்டி போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் வழியாகத்தான் மழைநீர் உள் செலுத்தப்பட்டு பின்னர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக சேமிக்கப்படுகின்றது.
இது குறித்து கடையின் உரிமையாளர் கூறியபோது, இந்த அமைப்பை ஏற்படுத்த ஆலோசனை கொடுத்தவர் மழைநீர் வரதராஜன். இவர் கொடுத்த ஆலோசனைகளின்படி இந்த குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீர் கசியாமல் பாதுகாக்கவும், காற்றுபுகாமல் தடுக்கவும், பூமியில் நிலவும் வெப்பம் தண்ணீரை பாதிக்காமல் இருப்பதற்கும். லீக் புரூப்,(கசிதல்), ஹீட் புரூப் (வெப்பத்தை தடுத்தல்) கேஸ் புரூப்(காற்றுத் தடுப்பு) ஆகியவற்றை காண்கிரிட், தெர்மாகோல், செங்கல் சுவர், டைல்ஸ் இவற்றைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லேயரும் ஒன்றரையடி அகலமான சுவர்களாக 7 லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டிக்கு மேல்புறத்தில் இயற்கை வடிகட்டி அமைக்கபட்டுள்ளது. மழை வந்ததும் உடனடியாக இந்த குடிநீர் தொட்டியில் சேகரிப்பதில்லை. மழைபெய்யும்போது 2-வது நாளிலிருந்துதான் நாங்கள் சேகரிப்போம். முதல்நாளில் இயற்கையாகவே மழைநீர் சற்று அசுத்தமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இது தவிர கடையின் மேல்புறத்தில் தேங்கியிருக்கும் அழுக்குகளையும் குடிநீராக மாற்றக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருக்கிறோம். இந்த மழைநீர் அமைப்பு ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகளாகிறது.
கடந்த 5 தலைமுறைகளாக நாங்கள் இந்தக் கடையை நடத்தி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளோம்
இதுகுறித்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும்போது, ”நாங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கடையில் இனிப்பு மற்றும் கார வகைகள் வாங்கி வருகிறோம் முன்பு இருந்த சுவையை விட தற்போது மழை நீர் மூலமாக தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் மிகவும் சுவையாக உள்ளதாகவும் சில நாட்கள் வைத்துக்கூட சாப்பிட்டாலும், அதே சுவையோடு இருப்பதாகவும் தெரிவித்தனர். மற்ற கடைகளை விட இந்த கடையில் விலை குறைவாகவும் தூய்மையான தண்ணீரில் இனிப்புகள் தயாரிக்கப்படுவதால் அதை வாங்கி உட்கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்
தற்போதைய சூழலில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இந்த நிலையில் தமிழக அரசு மழை நீரைச் சேமிப்பதற்கான திட்டங்களை தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த நிலையில் திருவாரூரில் மழைநீர் சேகரிப்பு குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் பொதுமக்களிடம் அதிகரித்து வரும்நிலையில் திருவாரூர் நா.கோ. சிவராமன் இனிப்பகம் மழைநீர் சேகரிப்பில் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
திருவாரூர் : மழைநீரை குடிநீராக்கி செய்யப்படும் சூப்பர் ஸ்வீட்ஸ்..! திருவாரூரில் செம ரெஸ்பான்ஸ்..!
கு.ராஜசேகர்
Updated at:
27 Jul 2021 03:14 PM (IST)
இனிப்பகத்தில் திண்பண்டங்கள் தயாரிக்க, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி அந்ததண்ணீரை பயன்படுத்தியே இனிப்புவகைகளும், கார வகை திண்பண்டங்களும் தயாரிக்கின்றனர்.
இனிப்புகள்
NEXT
PREV
Published at:
27 Jul 2021 03:12 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -