சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பாரத பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டிவிட்டு கடந்த 1897ஆம் ஆண்டு தாயகம் திரும்பியபோது ராமேஸ்வரம், மதுரை வழியாக கும்பகோணத்திற்கு பிப்ரவரி 3 ம் தேதி ரயில் மூலம் வந்தார். கும்பகோணத்தில் மூன்று நாட்கள் தங்கிய விவேகானந்தர், வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு ஆற்றினார். ’எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், குறிக்கோளை அடையும்வரை தொடர்ந்து செயல்படுங்கள்’ என்ற தனது முழக்கத்தை முதலில் கும்பகோணத்தில்தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுவாமி விவேகானந்தர் விஜயம் செய்த 125ஆம் ஆண்டையொட்டி கும்பகோணத்தில் விஜய விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் வழிகாட்டலுடன், கும்பகோணம் அசூர் புறவழிச்சாலையிலுள்ள ராமகிருஷ்ணர் விவேகானந்தர் அறக்கட்டளை கோயிலில் சிறப்பு சொற்பொழிவு, கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், நகரில் உள்ள 13 பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ, மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தர் விஜயம் சிறப்பு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள விவேகானந்தர் வருகை நினைவு பலகை மற்றும் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. மடத்து தெருவில் தனியார் நிறுவனத்தில் பூஜைக்கான சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் 125 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய கும்பகோணம் போட்டர் டவுன் ஹாலில் அவரது படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், ஓவியப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 78 மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜிதமானசந்தா மகராஜ் பரிசு வழங்கினர்.
இதில், சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் பேசுகையில், ”சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை வருங்கால தலைமுறையினர் அறிந்து வாழ்க்கையில் பின்பற்றும் வகையில், கும்பகோணத்தில் அவர் விஜயம் செய்ததை போற்றும் விதமாக போர்டர் டவுன் ஹாலில் அவரது திருவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படவுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரசின் வழிகாட்டலுடன் திறப்பு விழா நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் கிளப் செயலர் விஜயகுமார், சோழ மண்டல ஸ்ரீ விவேகானந்தர் சேவா சங்கத் தலைவர் பாஸ்கர், பொருளாளர் பாரதி மோகன், கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்த அறக்கட்டளைச் செயலர் வெங்கட்ராமன், கண்ணன், கும்பகோணம் தென் பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை செயலர்கள் வெங்கட்ராமன், சத்தியநாராயணன், பொருளாளர் வேதம் முரளி, நிர்வாகக் குழு உறுப்பினர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்