தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் அருகில், 1979ஆம் ஆண்டு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டது.
காலப்போக்கில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே இருந்த போர்வெல் பழுதானதால், வேறு இடத்தில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டியும், போர்வெலும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் அறிவுரையின்படி பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பாதுகாப்பாக இடித்து அகற்றப்பட்டது.
அதேபோல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் அருகில் 20 ஆண்டுகளுக்கும் முன்பாக கூடுதல் வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டடம் கட்டப்பட்டு அவையும் பழுதடைந்து காணப்பட்டது. அந்த பள்ளிக் கட்டடமும் பொக்லைன் இயந்திரம் மூலம் பாதுகாப்பாக இடித்து அகற்றப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், பழுதடைந்த கூடுதல் வகுப்பறை கட்டடமும் இடித்து அகற்றப்பட்டதால், மாணவர்களின் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.
இது குறித்து கிராம மக்கள் சுந்தரராஜ் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்ப பள்ளி கட்டடம் மற்றும் நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. நாளடைவில் பள்ளிக்கூடத்திற்கு புதியதாக இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடமும், நீர் தேக்கத் தொட்டியும் புதிதாக கட்டப்பட்டது.
அதன் பிறகு பழைய பள்ளிக்கட்டடம் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் பயன்படாமல் இருந்தது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால், அக்கட்டடத்தின் ஸ்திர தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. தொட்டியின் அஸ்திவாரம் பகுதிகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும், தொட்டியின் மேல் பகுதி விரிசலும் விட்டிருந்தது.
இதேபோல் பள்ளிக்கூட கட்டடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்தும், கட்டடத்தின் முன்பகுதி விழுந்தும் வந்தது. இதனால் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவர்கள், பழைய பள்ளி கட்டடத்திற்கு சென்றாலோ, நீர் தேக்கத்தொட்டியின் கீழ் விளையாடும்போதோ, நிற்கும்போதோ இடிந்துவிழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படும். இதே போல் நீர்தேக்கத்தொட்டி, பள்ளி நடைபெறும் நேரத்தில் விழுந்தாலும் பெரும் விபரீதம் ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததின் பேரில், 20 ஆண்டுகால பழமையான பள்ளி கட்டடம் மற்றும் நீர்தேக்கத் தொட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது” என்றார்.