பிளாஸ்டிக் பொருட்களை  விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கும்பகோணம் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் மாநகராட்சிக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் ஆணையர் செந்தில் முருகன் உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன் மற்றும் பணியாளர்கள், திடீரென கும்பகோணம் மோதிலால் தெரு, ஜான்செல்வராஜ் நகர், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். இதில் இரண்டு  கடைகளுக்கு சொந்தமான குடோன்களில்  ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், கேரி பேக்குகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து இரண்டு குடோன்களுக்கு சீல் வைத்தனர். பின்னர் மீண்டும் இது போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



இது குறித்து நகர் நல அலுவலர் பிரேமா கூறுகையில், தேநீர் கடைகளில் குவளைகள், பாக்கு மட்டைகளால் செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் கொட்டாமல் தவிர்த்து, சேகரித்து, மறுபயன்பாடு செய்யலாம். எக்காரணம் கொண்டும் எரிக்கக்கூடாது எண்ணெயிலிருந்தும், எரிவாயுவில் இருந்தும் உருவாக்கப்படுகிற பிளாஸ்டிக்களில் நச்சுத் தன்மை உள்ள பல வேதிப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. அவை நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றை, நிலத்தடி நீரை, மண்ணை மாசாக்குவதுடன் மிக விரைவாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  ஒரு பிளாஸ்டிக் பொருள் மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகுமாம். கிட்டத்தட்ட மனிதனின் சராசரி வயது அளவீட்டில் 6 இல் இருந்து 8 மனிதர்களின் ஆயுட்காலமாகும். நாம் அழிவதுடன் வரும் அடுத்த தலைமுறையையும் சேர்த்து அழித்து வருகின்றோம்.




நாம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி விட்டு வீதியில் எரிந்துவிடுவதால், பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில், குளங்கள், ஏரிகள் என அனைத்திலும் கலப்பதால், நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த பிளாஸ்டிக் பைகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றது, சாலை ஓரங்களில் இவ்வகைப் பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெருவழியே பிதுங்கி வழிந்து சாலையில் ஒடுகின்றது. அதன்மீது நாம் நடக்கும் போதும், அதில் இருந்து வரும் தூர்காற்றை சுவாசிக்கும் போதும் பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது.


மக்களே, நம் வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகள் பல்வேறு உயிரினங்களுக்கு விஷமாவதுடன், மண்ணின் உயிர்வேதியியல் தன்மையையும் பாதிக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடுவோம்.  பிளாஸ்டிக்கள் சுற்றுச் சூழலுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனடியாகத் தவிர்த்திடுவோம். கடைகளுக்குப் போகும் போது வீட்டிலிருந்து துணிப் பை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.