மயிலாடுதுறையில் சட்டமன்ற உறுப்பினருக்காக உணவு  வழங்காமல் பசியில் காக்க பள்ளி குழந்தைகள்  வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சமீப காலங்களாக மாணவர்களுக்குச் சத்துக்குறைபாடு அதிகரித்து வரும் நிலையில், இதனை போக்க தமிழக அரசு நேற்று முக்கிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலும் காலை சிற்றுண்டி திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பைச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், முதற்கட்டமாகக் கிராமங்களில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாகப் பள்ளிகளில் 'காலை சிற்றுண்டி' திட்டத்தை திமுக அரசு இப்போது கொண்டு வந்துள்ளது. முதற்கட்டமாக சுமார் 33 கோடி செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதில் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மாணவர்களுக்குக் காலை உணவு கொடுக்கப்படும்.




இதற்கான வழிகாட்டுதல்களுடன் தேவையான அரசாணைகளும் வெளியிடப்பட்டன. இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.கஸ்டாலின் நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்கள் உடன் இணைந்து உணவு சாப்பிட்ட அவர், மாணவர்களுக்கும் உணவை வழங்கினார். தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும் 1,545 அரசுப் பள்ளிகளில் இந்த முதல்வரின் காலை உணவுத் திட்டம் 2022-2023 ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்படவுள்ளது.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று தமிழக அரசின் சார்பில் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை 8 மணிக்கு உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினர். 




இதேபோன்று திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், திமுக நகர்மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் திட்டத்தை காலை 8 மணிக்கு துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவரும் முதல் நிகழ்ச்சியில் உணவு பரிமாறி விட்டு மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்த முடித்து விட்டு நமக்காக சின்ன சிறு குழந்தைகள் சாப்பிடாமல் பசியில் காத்திருப்பதை மறந்து அவர்கள் அனைவரும் ஒன்பதரை மணிக்கு மேல் தாமதமாக திருஇந்தளூர் பள்ளிக்கு வந்தனர். 




வந்தவர் காலம் காலம் கடந்து குழந்தைகள் பசியில் இருப்பதை கூட கருதாமல் அவர்களுக்கான சால்வை அணிவிப்பு மரியாதை எல்லாம் பெற்று கொண்டு சாவகாசமாக உணவு வழங்க வந்தனர். அதுவரை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறு குழந்தைகள் பசியில் காக்க வைக்கப்பட்டனர். அவர்களது பசி தெரியாமல் இருக்க சிறு சிறு விளையாட்டுகள் ஆசிரியர்கள் விளையாடச் சொல்லி நேரத்தை போக்கினர். தொடர்ந்து சுமார் 10 மணி அளவில் இரண்டு மணி நேரம் காலதாமதத்திற்கு பின்னர் குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. இதனால் குழந்தைகள் பசியில் வாடினர் அதனைத் தொடர்ந்து வகுப்புகள் தாமதமாக துவங்கப்பட்டது.