25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் மிகவும் பழமையான மீட்டர்கேஜ் பாதையாக சென்னை-காரைக்குடி-ராமேஸ்வரம் வழி பாதையாக இருந்தது. இந்த வழிபாதையில் ராமேஸ்வரம், காரைக்குடி வரையில் ஜனதா, கம்பன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழிபாதை அகல ரயில் பாதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு செகந்திரபாத்திலிருந்து சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயங்கப்பட உள்ளதாக ரயில்வேதுறை அறிவித்தது. அந்த ரயில் வியாழன் தோறும் காலை 9.45 மணிக்கு சென்னை எக்மோரில் புறப்பட்டு திருவாரூர் 3.15 மணிக்கு வந்து சேர்கிறது. பின்பு 3.25-க்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு இரவு 11.40-க்கு சென்றடைகிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரத்தில் 8.50 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் மதியம் 3.15 மணிக்கு வந்து, அங்கிருந்து 3.25-க்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 9.50-க்கு சேர்கிறது. பின்னர் செகந்தராபாத்க்கு பயணத்தை தொடர்கிறது.
இந்த சிறப்பு ரெயில் அறிவிப்பு பயணிகள் இடையே வரவேற்பையும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி நேற்று முன்தினம் இரவு செகந்திரபாத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு காலை வந்தடைந்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து 9.45 மணிக்கு புறபட்டு திருவாரூருக்கு மதியம் 3.15 மணிக்கு வந்தது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திருவாரூர் ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பாரதி, இலியாஸ், அக்பர் பாட்ஷா ஆகியோர் இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தனர். இதில் திருச்சி கோட்ட இயக்குதல் மேலாளர் வெங்கட்டராகவன் கலந்து கொண்டார். ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், செகந்திராபாத்- சென்னை-திருவாரூர்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பஸ் பயணத்தை விட பயண நேரமும், கட்டணமும் குறைந்த அளவில் சிறப்பு ரயில் மூலம் கிடைப்பதால் மிகுந்த பயனை பயணிகளுக்கு அளிக்கும். இந்த வழிதடத்தில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், திருவாரூர் ரயில் நிலையம் முன்மாதிரி ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஏடிஎம் வசதி, தொடுதிரை வசதி, முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல வாகனம், உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருப்பது பயணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் ஒரு சில வசதிகளை தவிர பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக திருவாரூரில் இருந்து மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு ரயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் அந்த ரயில் வசதியும் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது உடனடியாக மத்திய அரசு ரயில்வே துறை ரயில் வசதிகளை அதிகப்படுத்தி தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுகிறோம் என தெரிவித்தார்.