தஞ்சாவூர்: கடந்த மே 2025ம் மாதத்தில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என தஞ்சாவூர் மாவட்டத்தில் 66 நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தொழிலாளர் உதவி ஆணைய அமலாக்கம் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சென்னை, தொழிலாளர் ஆணையர் உத்தரவுபடியும், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் ஆகியோரின் அறிவுரைகளின்படியும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986-ன் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு மே மாதத்தில் சூப்பர் மார்க்கெட் மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினருடன் சேர்ந்து தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் பாபநாசம் பகுதிகளில் உள்ள 66 நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986-ன் படி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும், 14 வயது நிறைவடைந்த, ஆனால் 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான அனைத்து வகையான தொழில்களிலும் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் வேலையளிப்பவருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் யாராவது பணிபுரிவது கண்டறியப்பட்டால், சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது தஞ்சாவூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), அலுவலக தொலைபேசி எண்ணிலோ 04362-264886 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளி உருவாகும் போதும் நாட்டின் சாதனையாளர் ஒருவர் இழக்கப்படுகின்றார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்காலம் இருண்ட நிலைக்குத் தள்ளப்படுகின்றது. புத்தகப்பையை சுமக்க வேண்டிய வயதில் குடும்ப வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளியாக மாறும் குழந்தைகளின் வாழ்வு சுருண்டு போகின்றது. எதிர்காலம் என்ற இருட்டறையில் அந்த குழந்தைகள் தள்ளப்படுகின்றன. இதனைத் தடுக்கவே ஐஎல்ஓ எனப்படும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாளை ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கொண்டாட வலியுறுத்துகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இந்த நாள் உலகெங்கிலும் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் அவலநிலையை முடிவிற்குக் கொண்டுவரவும், அனைத்து வகையான குழந்தைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் முயற்சி செய்கின்றது. 2002ஆம் ஆண்டு முதல் ஐஎல்ஓ எனப்படும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்தும் முறையை ஒழிப்பதற்கும், தடை செய்வதற்கும் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க உலக சமூகத்தை வலியுறுத்தியது. 2025ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத உலகை உருவாக்கும் இலக்கை அடைய, அதிகமான செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றது.