தஞ்சாவூர்: சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடையில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்ததால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.

Continues below advertisement

தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் உலமாக்கள், மதரஸா ஆசிரியர்கள், பள்ளிவாசல் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று உறுப்பினர்களாக இணைந்து நலவாரிய அட்டைகளை பெற்றுக் கொண்டனர்.

சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சத்தியபாமா தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். சிறுபான்மையினருக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்ததுடன், தகுதியான அனைவரும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்து அரசின் நலன்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Continues below advertisement

முகாமில் தஞ்சாவூர் மாவட்ட வக்ஃபு ஆய்வாளர் முகமது நாசர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வக்ஃபு ஆய்வாளர் தன்ஸிரா, நாகப்பட்டினம் மாவட்ட வக்ஃபு ஆய்வாளர் பசிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை நடைமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த சிறப்பு முகாமில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உலமாக்கள், மதரஸா ஆசிரியர்கள், மஸ்ஜித் பணியாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர தகுதியுடையோர் பெருமளவில் கலந்து கொண்டனர். அவர்களிடம் தேவையான ஆவணங்கள் பெற்று உறுப்பினர் பதிவு மேற்கொள்ளப்பட்டதுடன், நலவாரிய உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டன.

மேலும், நலவாரியத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி, திருமண நிதியுதவி, இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண நிவாரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட தமிழக அரசு வழங்கும் பல்வேறு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை எளிதாக பெற முடியும் என்பது குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனர். இதனால் முகாமில் பங்கேற்றவர்கள் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்று பயன்பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் கண்காணிப்பாளர் விஸ்வலிங்கம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஜமால் முகமது இப்ராஹிம், தஞ்சை மாவட்ட ஜமாஅத்தின் உலமா சபை செயலாளர் ஜபருல்லாஹ், இளநிலை உதவியாளர் முபாரக், உதவியாளர் அகமது சர்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஒருங்கிணைத்தனர்.

சிறுபான்மையினருக்கான அரசின் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் முழுமையாக சென்றடைய இதுபோன்ற உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் முக்கிய பங்காற்றுவதாகவும், எதிர்காலத்திலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.