தஞ்சாவூர்: திருச்சியில் அமைக்கப்பட்டு 12 ஆண்டுக்கு மேல் திறக்கப்படாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அவரது பிறந்தநாளுக்குள்ளாக திறக்கவிட்டால், அமைச்சர் கே.என்.நேரு வீட்டை முற்றுகையிடுவோம் என்று சிவாஜி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாநகர் பகுதியில் பாலக்கரை அருகே பிரபாத் ரவுண்டானாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. 1928ஆம் ஆண்டில் பிறந்த சிவாஜி கணேசனுக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலில் அவர் திருச்சியில் உள்ள நாடகக்குழுவில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரைத்துறையிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அவர் நடித்த பராசக்தி, கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான படங்களின் மூலம் அவரது நடிப்பும், வசனங்களும் பல ரசிகர்களை கவர்ந்தது.

தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் சிவாஜி நடிக்கத் தொடங்கினார். செவாலியே உள்ளிட்ட சர்வதேச, தேசிய, மாநில அளவிலான பல விருதுகளையும் பெற்றவர்.சிவாஜி 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி காலமானார்.

இவரது மறைவுக்குப் பின்னர் திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அப்ோது ஆட்சியில் இருந்த திமுகவால் செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜிக்கு 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது. சிலை திறப்பதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் சிலை துணியைக் கொண்டு மூடப்பட்டது. தற்போது வரை மூடிய சிலை மூடியவாறு இருக்கிறது. இந்த சிலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் இதற்கு இன்றளவும் தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையல் தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே, சோழ மண்டல சிவாஜி பாசறையின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு சிவாஜி ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கோ.அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், சோழ மண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா.வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறியதாவது;

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில், 2011ம் ஆண்டு, திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில், 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது. தற்போது சிவாஜி சிலை 12 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு திறந்து வைக்க வேண்டும் என்பதே அகில உலக சிவாஜி ரசிகர்களின் வேண்டுகோள்.

திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என நாங்கள் யாரும் கேட்கவில்லை. அமைச்சர் கே.என்.நேரு தாமாகவே முன்வந்து முழு மனதுடன் சிவாஜிக்கு சிலை வைத்ததை வரவேற்கிறோம்.

இந்த சிலையை திறக்கக் கோரி அமைச்சர் கே.என்.நேருவிடம் கடந்த வாரம் முறையிட்டோம். அவரும் ஒரு மாதத்தில் செய்து தருவதாக உறுதி அளித்தார். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தை சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாளான அக்டோபர் 1ம் தேதி முற்றுகையிட உள்ளோம். இப்போராட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களும் ஒன்று திரண்டு மேற்கொள்ளவுள்ளோம் என்றார்