கும்பகோணம் நகர் மேல்நிலை பள்ளியானது 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பணி நிறைவுபெற்ற ஆங்கிலேய தலைமை காவலரான மார்டின் என்பவரால் துவங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இப்பள்ளியில், கணித மேதை சீனிவாச இராமானும், இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பத்மவிபூசன் மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற, புகழ்பெற்ற மிருதங்கக்கலைஞர் உமையாள்புரம் கே. சிவராமன், ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் நிறுவனர் மற்றும் தலைவரான ஷிவ் நாடார், தி இந்து நாளிதழின் முன்னோடி ஆசிரியர் மற்றும் உரிமையாளர் எஸ். கஸ்தூரி ரங்க அய்யங்கார், பத்ம பூஷன் பெற்ற சிவில் பொறியாளர் எல். வெங்கடகிருஷ்ண ஐயர், தொழிலதிபர் சின்னசாமி ராஜம், பறக்கும் மருத்துவர் என அழைக்கப்பட்ட எஸ்.ரங்காச்சாரி, வரலாற்று அறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார், பத்மபூஷன் பட்டம் பெற்ற பொறியியலாளர் எல்.வெங்கடகிருஷ்ண அய்யர் மற்றும் புகழ்பெற்ற ஏராளமானோர் இப்பள்ளியில் பயின்றுள்ளனர்.
இத்தககைய புகழ்பெற்றவர்கள் படித்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியரும், 50 க்கம் மேற்பட்ட ஆசிரியர்கள், 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நிர்வாக குழுவும், முன்னாள் மாணவர் அமைப்பும் இயங்கி வருகின்றது. கொரோனா தொற்று இரண்டாவது அலை குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவரக்ளுக்கான வகுப்புகள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில், நகர மேல்நிலைப்பள்ளியில் உள்ள கணித ஆசிரியர் சேகர் (57) என்பவர் மீது, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 23 மாணவிகள், பள்ளியின் செயலாளர் வேலப்பனிடம், புகார் அளித்தனர். அதில், ஆசிரியர் சேகர் எங்களை தனியறைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, செயலாளர் வேலப்பன், கடந்த 14ஆம் தேதி, தஞ்சாவூர் எஸ்பி ரவளிப்பிரியாவிடம், புகார் மனு அளித்தார். பின்னர் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
எஸ்பியுன் உத்தரவின் பேரில், ஆசிரியர் சேகரை, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். உலக புகழ்பெற்ற கணித மேதை ராமானுஜர் படித்த பள்ளி என்பதால், வருடந்தோறும் உலகத்தில் உள்ள கணித மேதை மாணவர்கள், அவர் படித்த வகுப்பிற்கு வந்து, அவர் அமர்ந்த இடத்தில் அமர்ந்து, பாடம் படித்து செல்வது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில்,
ஆசிரியர் சேகர், மாணவிகளிடம் மிகவும் மோசமானவராக நடந்துள்ளார். இவரை பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியும். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.அப்போது ஏற்பட்ட பிரச்சனைகளை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர் சேகரை அழைத்து, கண்டித்து அனுப்பியுள்ளனர். இதனால் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என, மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்வதற்கு துணிந்து விட்டார். ஒருபுறம் கொரோனா தொற்று பயம், மறுபுறம் சேகரின் பாலியல் தொந்தரவால், மாணவிகள் தங்களுக்குள்ளாகவே குமுறிக்கொண்டிருந்தனர்.
நாளுக்கு நாள் சேகரின் தொல்லை அதிகமானதால், இப்பள்ளியில் படிக்கும் 23 மாணவிகள் புகார் அளித்ததாக கூறும் பள்ளி நிர்வாகம், 23 மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த போது, உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுப்பது ஏன் என்று புரியாத புதிராக இருக்கின்றது. இதற்கு முன் படித்த மாணவிகளின் நிலை பற்றி, பள்ளி நிர்வாகம் ஏன் கண்டு கொள்ளாமல் இருந்தனர் என்பது கேள்வி குறியாகியள்ளது. ஆசிரியர் சேகர், பல வருடங்களாக, மாணவிகளிடம் இது போன்ற செயல்களை செய்ததை, பள்ளி நிர்வாகம் ஏன் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது என்பது கேலிகூத்தான விஷயமாகும்.
எனவே, ஆசிரியர் சேகரை விசாரிப்பது போல், பள்ளி நிர்வாகத்தினரை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பெற்றோர்களை திரட்டி போராட்டம் செய்யப்படும் என்றார். இதுகுறித்து பள்ளியின் செயலாளர் வேலப்பன் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக ஆசிரியர் சேகர் மீது தொடர்ந்து புகார்கள் வருகிறது. கல்வித் துறைக்கும் நாங்கள் புகார் தெரிவித்துள்ளோம். இப்போது வந்த புகாரின் பேரில் மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்கள் முன்னிலையில் விசாரணை செய்தோம். மாணவிகளின் புகார் மீது உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை செய்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். இப்போது பள்ளிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால் தஞ்சை எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளோம். ஆசிரியர் சேகரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர் என்றார்.