சசிகலா சகோதரர் திவாகரன் முன்னாள் அமைச்சர் காமராஜ் தோல் மீது கைபோட்டு பேசியபடி சென்று மன்னார்குடியில் சாமி தரிசனம் செய்தது அதிமுகவினர் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் ஆள்காட்டியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தர்மபுரம் ஆதினம் நேற்று இரவு வருகை தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் முன்னாள் உணவுத்துறை  அமைச்சர் ஆர்.காமராஜ்,  சசிகலாவின் சகோதரர் திவாகரன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோருக்கு ஆலய வளாகத்தில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் கும்பாபிசேகம் முடிந்து ஆள்காட்டி  அம்மனுக்கு அபிசேகம் நடைபெற்றது. இதில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சாமி தரிசனம் செய்வதற்காக  ஆலயத்திற்கு வந்தார். அப்போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி வணக்கம் தெரிவித்து கொண்டனர்.



 

பின்னர் இருவரும் ஒன்றாக நின்று சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்து கோயில் பிரகாரத்தில் இருவரும் சுற்றி வந்த போது சசிகலாவின் சகோதரர் திவாகரன் முன்னாள் அமைச்சர் காமராஜ் தோலில் கைபோட்டு பேசிய படி நடந்து சென்றனர். இதனை அங்கிருந்த பொதுமக்களும் அதிமுகவினரும் ஆச்சர்யத்துடன் பார்த்துப்சென்றனர்.



 

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் பலர் பிரிந்து சென்றனர்.  சசிகாலவின் சகோதரர்  திவாகரன் தனி கட்சி தொடங்கினார். சசிகலா தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கினர். ஆட்சியில் இருந்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் அணிகள் இப்போது வரை அதிமுகவில் சசிகலாவுக்கு இடம் இல்லை என கூறி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் சசிகலாவின் சகோதரர் திவாகரனுடன் ஒன்றாக சாமி தரிசனம் செய்தது அதிமுகவினர் இடையே பல்வேறு யூகங்களை  ஏற்படுத்தியுள்ளது.



குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டனர். இவர்களிடம் இரட்டை இலை சின்னமும் அதிமுக தொண்டர்களும் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தனர். மேலும் அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் கிடையாது என திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருந்த அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராக இருந்து வந்தவர் மன்னார்குடியை சேர்ந்த காமராஜ். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பல்வேறு அரசியல் மேடைகளில் சசிகலாவின் குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்து பேசி வந்த நிலையில் இன்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கும்பாபிஷேக நிகழ்வில் சந்தித்து இருவரும் சிரித்தபடி அதிமுகவினர் மத்தியில் பேசியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.